Friday, December 27, 2013

பிரியாணி

நான் அடிப்படையிலேயே சைவம் என்பதால் இந்த பிரியாணியில் பீஸ் இல்லை, இது பிரியாணியே இல்லை குஸ்கா என்றெல்லாம் எழுதப் போவதில்லை. சில பல ஓட்டைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு நல்ல பிரியாணியே. எப்பொழுதும் என்னைப் போன்ற இணைய எழுத்தாளர்கள் எழுதும் வார்ப்புருவில்/நியமத்தில்/டெம்ப்ளேட்டில் இப்போழுதைய மையநீரோட்ட எழுத்தாளர்கள் எழுதுவதால், அவர்களின் டெம்ப்ளேட்டில் நான் எழுதும் நிலைமை வந்துவிட்டது. படத்தின் கதையை இத்தனை நேரம் எல்லோரும், பார்த்து, படித்து, கேட்டு தெரிந்து கொண்டிருப்பீர்கள் ஆதலால் அதைப் பற்றி பேசுவதில் பயனில்லை.

இப்படம் பகடியின் உச்சம். அதுவும் பல இடங்களில் தான் பகடி செய்வதையே பகடி செய்துள்ளார் இயக்குனர். ஆரம்பத்தில் கதை மெதுவாக போகிறது, பாடல்கள் பல இடங்களில் இடைஞ்சலாக இருந்தாலும், ஹாரிஸ் ஜெயராஜ் சில பல இடங்களில் ஜொலிக்கிறார். இதர பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கவனித்துக் கொண்டுள்ள யுவன் அவர்களும் தேவையானதையே கொடுத்துள்ளார். இப்படம் நடிகர் கார்த்தியின் சீரான தோல்விக்கு தடைக்கல்லாய் அமைந்தது வருத்தத்திற்குறிய செய்தி தான் என்றாலும் ஒரு படம்தானே, போகட்டும். இது ஒரு குடும்பப் படம். வெங்கட் பிரபு அவரின் முந்தைய பட நடிகர்கள் பலரையும் இதில் கவுரவத் தோற்றத்தில் அழைத்திருப்பது அவரின் பெருந்தன்மயைக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் வழக்கமாக வரும் சம்பத், ப்ரேம்ஜி மற்றும் குழுவினர் இப்படத்திலும் உண்டு என்பதை எல்லாம் சொல்லிதெரிய வேண்டிய அவசியமே இல்லை. தன் தம்பி மீது உள்ள அதீத பாசத்தின் வெளியீடே இப்படம் என்றும் கூறலாம். அவரை வெறும் தம்பியை படம் நெடுக அழைத்து வரும் இயக்குனர் என்று கூறுவது அவரின் மேன்மையான செயலை இகழும் செயல். சென்ற படத்தில் தல அசீத்தையே தன் தம்பி போல் கை வித்தைக் காட்ட வைத்த அவர் இப்படத்தில் பழம்பெரும் நடிகர் நாசரை ப்ரேம்ஜியாகவே வாழ வைத்துவிட்டார். அப்பெரும் நடிகருக்கு ஐஸ் வைத்துத் தான் இப்படியெல்லாம் செய்திருப்பார் என்பதன் குறியீட்டைக் கூட நாம் காணும்படி அவரை படம் நெடுக ஐஸ் பெட்டியிலேயே வைத்து நமக்கு உணர்த்தி இருப்பார். படத்தை தயாரித்திருப்பதும் நாயகனின் குடும்பமே என்பது படத்தின் கூடுதல் குடும்பச் சிறப்பு. படத்தில் நாயகன் அதிக நேரம், அதிக முறை, சண்டை போடுவது நடிகை உமா ரியாஸ் அவர்களுடன் தான். இதன் மூலம் பின்நவீத்தமாக ஆண்கள் தான் ஹிட்மேன் என்பதை மாற்றி, அவரை ஹிட்வுமனாக்கி பாரம்பரிய எண்ணங்களை கட்டுடைத்திருப்பார்.


இவ்வளவு பெருமை உடைய இப்படத்தில் லாஜிக் ஓட்டைகளே இல்லையா, குழப்பமே இல்லையா என்றால் இருக்கிறது. பல ஓட்டைகள். உதாரணமாக சிலவற்றை இங்கு நான் முன்வைக்கின்றேன். அவை – படத்தில் சாம் ஆண்டர்சனின் பெயர் – சாம், படவா கோபியின் பெயர் – கோபி, ராமகிருஷ்ணனின் பெயர் – விஜயகிருஷ்ணன் ஆனால் ஜெயப்பிரகாஷின் பெயர் – சம்பத், சம்பத்தின் பெயர் – ரியாஸ், உமா ரியாஸிற்கு பெயரே இல்லை. அதனால் சம்பத் என்றால் யாரை என்ற குழப்பம் படம் நெடுக ஓடுகிறது. இவ்வாறு பல லாஜிக் ஓட்டைகள். இருந்தும் ரசிக்கலாம். இப்படம் வெற்றி அடையக் காரணம் என்ன என்பதை கீழே உள்ள புகைப்படத்தின் குறியீடு கூறும்.

நன்றி : விக்கிபீடியா (புகைப்படம்).

Wednesday, December 4, 2013

Fast and furious 6

யுனிவர்ஸல் ஸ்டூடியோவில் சில பல வருடங்களுக்கு முன்னால். பெரியண்ணாச்சி மற்றும் சின்னணாச்சி டிஸ்கஷன்.

பெ: - பெரியண்ணாச்சி. சி – சின்னண்ணாச்சி.

சி: அண்ணே, புதுசா ஒரு பட்த்துக்கு ஸ்டுடியோவில செட் கேக்குறாங்க. ரொம்ப நெறைய எடம் வேணுமாம், 500 கோடி பட்ஜெட் போல அப்படியே நாமளே டிஸ்ட்ரிபியூஷன் பண்ணிரலாம்னு சொல்றாங்க.

பெ: அது சரி, யாரு நடிக்குறா? யாரு டைரக்‌ஷன்?

சி: அது எதோ பெரிய எடம் போல, டீடைல்ஸ் சொல்ல மாட்ராய்ங்க.

பெ: சரி சரி, என்ன எழவோ, டிஸ்ட்ரிபியூஷன் பத்தி அப்புறம் பாதுக்கலாம் மொதல்ல செட்ட வாடகைக்கு விடு. அதுக்கப்புறம் மத்ததை பேசிக்கலாம்.

சி: அங்க தான் பிரச்சனை, நாம போன படத்துக்காண்டி வாங்குன கார்லாம் நெரயா இருக்கு. எல்லாம் காஸ்ட்லி காரு, எடைக்குக் கூட போட முடியாது.

பெ: அடப்பாவி, சரி என்ன பண்ணலாம்?

சி: அது தான் எனக்கும் தெரியல!!

பெ: ஏய்! அந்த நீல் மோரிட்ஸ் பயலை கூப்புடு, அவன் ரேஸ் கார் படமா எடுப்பான்ல. 5 படம் வந்துருச்சு, ஆறாவத எடுக்க சொல்லிருவோம்.

சி: சூப்பர் ஐடியா அண்ணே!!


அடுத்ததாக அண்ணன் நீல் ஸ்டுடியோ வருகை மற்றும் படத்துவக்கம்.

பெ: வாங்க தம்பி.

நீல்: வணக்கம்ணே, அடுத்த படம் எடுக்க கூப்டீங்களாம்ல.

பெ: ஆமாம்பா, அந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்ல அடுத்த படம் எடுதுறலாமா?

நீல்: சரிண்ணே பண்ணிரலாம், கதைய துபாய்க்கு எடுத்துட்டுப் போய்ரலாம்னு இருக்கோம்.

பெ: நோ, நோ இங்கிலாந்துக்குப் போய்டு. அங்க நமக்கு நெறய காரு இருக்கு, உன் வேல படத்துல எல்லாத்தயும் யூஸ் பண்ணுற. முடிஞ்சா ஒடைச்சு போட்டுரு.

நீல்: சரிண்ணே.

பெ: அப்புறம் இந்த படம் ஓடுச்சுன்னா அடுத்து நீ துபாய் போகலாம். ஒண்ணும் பிரச்சனை இல்லை. அதே போல அந்த ஜப்பான்காரன் இந்த படத்துல இருக்கானா?

நீல்: ஆமாண்ணே. ராக், வின் டீஸல், பால் வாக்கர் எல்லாரும் நீங்க போன வாட்டி சொன்னாப்புல அந்த புள்ள மிஷேல் ரோட்ரிக்ஸயும் சேர்த்துக்கிடாச்சு.

பெ: சரி சரி, அடுத்த படத்துல ஜப்பான் காரன தூக்கிடு. இங்கிலாந்துன ஒடனே தான் நெனவுக்கு வருது, அந்தூருல ஒருத்தன் நல்லா காரு ஓட்டுவானே. அதான்பா அவன் ஒரே ஆளா காரு மட்டுமே ஓட்டி படத்த ஓட்டுவானே அவனையும் சேத்துக்க வேண்டியதுதான.

நீல்: ஜேஸன் ஸ்டாத்தம் தான சொல்றீங்க சேர்த்துகிடலாம், அவரையே இந்த படத்துல காமியோ வர வெச்சு ஜப்பான் காரன தூக்கிடலாம்.

பெ: சூப்பர் பா, காரையெல்லாம் நாளைக்கே ஒடைக்க ஆரம்பிச்சுரு.

நீல்: என்னது?

பெ: அதான் பா, ஷூட்டிங் சீக்கிரமே ஆரம்பிச்சுருன்னு சொன்னேன். (நல்ல வேளை உண்மை தெரியல, படத்துக்கு படம், காருக்கு காரு, காசுக்கு காசு, பெரியண்ணன் ஹேப்பி.)

அதே நேரத்தில் ஜஸ்டின் லின் கைப்பேசியில்,
ஜ: ஹலோ நீல், மச்சி, ஒரு வழியா யுனிவர்சல் காரனுங்கள ஏமாத்தி காரை வாங்கிட்ட போல, நெறையா காரு இருக்கு என்ன சொன்ன ராசா. இந்த வாட்டி எல்லாத்தையும் பத்திரமா குடுத்துருவோம்.

நீல்: போடா டேய், அவனுங்க காரை உடைக்குறதுக்குத் தான் குடுத்துருக்காய்ங்க. இத்த உடைச்சா தான் அடுத்த படம் தருவாய்ங்களாம்.

ஜ: சரி, காப்பாத்துறது தான் கஷ்டம், உடைக்குறது சப்பை மேட்டர். காரை எடுக்குறோம் உடைக்குறோம்.

இவ்வாறாக தொடங்கப்பட்டது தான் Fast and Furious 6. 

டிஸ்கி: இப்பதிவு பால் வால்கருக்கு சமர்ப்பணம். 
Tuesday, November 26, 2013

Krrish 3 - இப்போது தமிழில்

என்னுடைய கெரசின் (அதான்பா மாமா பையன் இனி அண்ணன் என்றே வைத்துக் கொள்வோம்) திருமணத்திற்கு சென்ற வாரம் கும்பகோணம் சென்றிருந்தேன். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில். திருமணம் விமரிசையாகத் தான் நடந்தது. மணநாளிற்கு முதல் நாள் என் இரு தோழர்கள் வந்திருந்தனர். ஒருவர் காவல் துறை மற்றவர் கல்வித் துறை. அவர்களை எனக்கு முன்னமே தெரியும் என்பதாலும் எனக்கு வேறு வேலை இல்லை என்பதாலும் அவர்களோடு மாலை முதல் சுற்றிக்கொண்டு இருந்தேன். அன்று இரவு பணம் தீர்ந்து விட்டதால் கல்வித் துறை ATM தேடி அலைந்து கொண்டிருந்தார், அவரோடு நானும் காவல் துறையும் அலைந்து கொண்டிருந்தோம். அம்மா புண்ணியத்தில் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்தது அதனால் எதிரில் இருந்த ATMமை இரண்டே மணி நேரத்தில் கண்டுபிடித்து விட்டோம். அப்பொழுது மணி இரவு 10 அப்படியே சென்று உறங்க எங்கள் மூவருக்கும் உறக்கம் வரவில்லை. அப்படியே அலைந்து கொண்டிருக்கையில் பக்கத்தில் ஒரு திரை அரங்கம் கண்ணுக்கு தென்பட்டது. அது எவ்வ்வளவு பெரிய துர்பாக்கியம் என்பதை அப்போது நாங்கள் அறியவில்லை.
Wednesday, November 20, 2013

பொறுமை - நண்பன்

அடியேனின் நண்பர் ஒரு சிந்தனாவாதி. அவரின் சிந்தனைகள் எல்லாம் மேற்கத்திய தாக்கம் இருப்பதுபோல் இருந்தாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி, சாண்டில்யன் மற்றும் பலரின் தாக்கம் அதீதமாக தெரியும்.(இவர்கள் இருவரின் தாக்கம் என்றால் என்ன என்று என்னிடம் கேட்க வேண்டாம் ஏனெனில் எனக்கு தெரியாது). இவ்வாறு தெளிவாக பிராந்திய சிந்தனாவாதியை மேற்கத்தியத் தாக்கம் பெறாமல் இருக்க மேலும் படங்கள் பார்த்து அறிவை வளர்க்க ஒரு புத்திமான் சத்யஜித் ரே என்னும் மாமனிதரை அறிமுகப்படுதினான். அடியேனும் அதை வழிமொழிந்தேன். அவரைப் பார்க்க ஆரம்பித்த நண்பன், பின் படிக்கலானான், பின் உணர ஆரம்பித்தான், பின்னர் சுவைக்க ஆரம்பித்தான் பின்னர் ரசிக்கலானான். இப்படியே சென்று கொண்டிருந்தால் அடியேன் இப்பதிவை எழுதி இருக்க மாட்டேன். அடியேனின் நண்பன் மேற்கூறிய எல்லாவற்றையும் தாண்டி சத்யஜித் ரே அவர்களால் அணுவளவில் தாக்கலானான். அவனது ஒவ்வொரு அணுவும் ரே, ரே என்’ரே’ புலம்பியது, புளங்காகிதம் அடைந்தது. அத்தோடு மட்டுமல்லாமல் அவனது தாய்மொழி வங்காளம் ஆகியது. ரே என்னும் ஒரே மனிதர் ஒருவனை வங்காளி ஆக்கிவிட்டர், அதுவும் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்.

இதில் புலம்ப என்ன இருக்கிறது என்ற குழப்பம் பலருக்கு வரலாம், எல்லோரும் OCEAN’s ELEVEN பார்த்திருப்பீர்கள், அதில் வரும் ”யென்” என்ற பாத்திரம் மாண்டரின் மொழி மட்டுமே பேசும். அதில் நடித்த அனைவருக்கும் மாண்டரின் புரியும் (ஆடியன்ஸாகிய நமக்கு மாட்டும் புரியாது) என்பதால் படம் நகரும் மிக அருமையாக. இப்படியாக வேலை அங்கு சரியாக நடக்கும் ஆனால் வங்காளம் அறியாத அடியேனைப் போன்ற சாமான்யனுக்கு ஏதும் விளங்க மறுக்கிறது. அதனாலேயே பல விடயங்களை என்னால் பகிர முடிவதில்லை. இது மட்டுமல்லாமல் அவர் ஜெ. வாசகராகி விட்டாரா என்றொறு சந்தேகமும் உள்ளது அதற்கு அவர் பதிவுகளின் நீளமே சாட்சி. ஆனால் அவரின் கருத்துக்கள் என்னவென்று புரிய மறுக்கின்றன. காற்றின் சீற்றத்தில் கண் தெரியாதது போல், அவரின் வங்காளச் சீற்றத்தில் அவரின் கருத்துக்களைப் பார்க்க முடியவில்லை.
தமிழில் நீண்ட பதிவுகள் எழுதாமல் சிறியதாக எழுதவேண்டும் என்ற அவாவோடு இதை முடித்துக் கொள்கிறேன்.

டிஸ்கி 1: இதனால் நான் கூற வரும் கருத்து – எனக்கு வங்காளம் தெரியாது, அவனுக்கு தமிழ் புரியாது. சும்மா நேரா திட்ட தெகிரியம் இல்ல, அதான் சூசகமா திட்டுரேன்.

டிஸ்கி 2: மச்சி நீ லாம் இங்க பொறந்து இருக்க வேண்டிய ஆளே இல்லை, கோல்கட்டால பொறந்து இருக்கணும்.

டிஸ்கி 3: எத்தனை நாள் தான் ப்ரபால்யங்களையே திட்டுறது, அதான் நம்ம நண்பர திட்டி ப்ரபால்யம் ஆக்கிரலாம்னு ஒரு நல்ல எண்ணம்.


டிஸ்கி 4: இது வரை உங்கள் திரையை கிழிக்காமல் படித்தாலோ, அல்லது இது வரை படித்தாலோ நீங்கள் மிக மிக பொறுமைசாலி என்ற நற்சான்றிதழை நானே வழங்குகிறேன். 

டிஸ்கி 5: இது புலம்பலை முகநூல் பதிவாக போடுவோரை பகடி செய்வதாக எண்ண வேண்டவே வேண்டாம். என் எழுத்து எல்லாம் ஈசனின் செயலே அன்றி எமது அல்ல. 
Friday, November 15, 2013

கேடி ராம்போ, கில்லாடி அர்னால்ட் - பின் நவீனத்துவ நீட்சி

மிக நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில் எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு வந்தது இந்த படம் தான். அப்படி நான் எந்த பட்த்தைப் பற்றி எழுத போகிறேன் என்று பார்ப்பதற்கு முன், சீக்வல்(Sequel) பற்றி சிறிது கூற விழைகிறேன்.

சீக்வல் என்பது யாதெனில் ஒரு பகுதியின் தொடர்ச்சி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது நீட்சியாக கொள்ளப்படுகிறது. ஏன் அப்படி கூறுகிறேன் என்றால் சினிமாவை எடுத்துக்கொண்டால் ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சி என்பதைத் தாண்டி அப்படத்தின் வியாபாரத்தின் நீட்சியாகத் தான் இருக்கிறது. இதற்கு பல உதாரணங்களை நம் தமிழ் சினிமாவிலேயே கூறலாம். இந்த நீட்சிக்கு முதன்மையான எடுத்துக்காட்டு முன்னா பாய், இப்பொழுது தமிழில் பீட்சா. பீட்சா முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்மந்தமே இல்லையெனிலும் முதல் பாகம் செய்த வியாபாரமே இதற்கான நீட்சிக்குக் காரணம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இப்பொழுது நீங்கள் நான் பேசப் போகும் படத்தைப் பற்றி யூகித்திருப்பீர்கள். ஆனால் உங்கள் யூகம் தவறு, நான் மேற்குறிப்பிட்ட படத்தைப் பற்றி பேச வரவில்லை. நான் பேசப்போகும் படம் இந்த வருடமே நீட்சியாக சில வாரங்கள் முன் வந்து மறக்கப்பட்ட படம்.
கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு

சிங்கம் 2ல் ஆப்பிரிக்கா வரை சிங்கம் செல்கிறார் என்றால் இப்படத்தில் கதைக் களனையே அமெரிக்காவில் வைத்திருக்கின்றனர். நடிகர்களும் அமெரிக்க நடிகர்களே, ஏன் இயக்குனர் மற்றும் தயாரிப்பைக்கூட அமெரிக்கர்களிடம் கொடுத்துவிட்டு வெளியீட்டின் பொழுது இந்திய முத்திரையுடன் வெளியிடப்பட்ட நீட்சி தான் “கேடி ராம்போ, கில்லாடி அர்னால்ட்”. இப்பாகமும் முதல் பாகமான “கேடி பில்லா, கில்லாடி ரங்கா” போல பல கிளிசேக்களை கொண்டுள்ளது. இரண்டு நாயகர்கள், பெரிய வில்லன் கும்பல், நண்பனைப்போல் இருக்கும் வில்லன்கள், நாயகனுக்காக உயிர்விடும் ஒருநபர் மற்றும் அல்லக்கைகள். இதோடு மட்டும் அல்லாமல் முதல் பகுதியைப்போல் நாயகர்கள் பெயருக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை. இவ்வாறு பல கிளிசேக்களை கொண்டு இது நீட்சி என்பதை புரிய வைத்தாலும் பாமரர்களும் அறிய எண்ணி அதே எழுத்துருவில்(Font) தலைப்பை வடியமைதிருப்பார்கள்.

இப்படம் நீட்சிகளின் மைல்கல் என்பதே என் எண்ணம், மற்றும் இது பீட்சா 2 வருவதற்கு முன்னரே வந்த்ததால் இப்படி பின் நவீனத்துவ நீட்சியின் முதல் படி என்றே கூறலாம். இப்படி கூறிக்கொண்டே படத்தின் கதையைக் கூறாமல் ஏமாற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம். படத்தின் கதை யாதெனில் சுய விருப்பமாக சிறை சென்று அங்கிருந்து தப்பிப்பதே தொழிலாக வைத்துள்ளார். அவர் ஒரு சிக்கலான சிறையில் மாட்டிக்கொள்கிறார், அவருக்கு உதவியாக இணை நாயகன்(துணை நாயகன் என்று போட்டு டெர்மினேட்டர் ரசிகர் சங்க உறுப்பினர்களிடம் அடி வாங்கும் எண்ணம் இல்லை) செயலில் இறங்குகிறார். அதன் பின் வரும் திருப்பங்களை திரையில் அல்லது திருட்டு விசிடியில் காண்க.

டிஸ்கி: இந்த படம் ஏனோ எனக்கு ஆங்கிலத்தில் வெளியான Escape Plan படத்தை அடிக்கடி நினைவு படுத்துகிறது.
Monday, June 3, 2013

மூன்று

தமிழ் என்பது மூன்றெழுத்து,
தலைவா என்பதும் மூன்றெழுத்து,
மச்சி என்பதும் மூன்றெழுத்து,
கலாய் என்பதும் மூன்றெழுத்து,
காமெடி என்பதும் மூன்றெழுத்து,
மொக்கை என்பதும் மூன்றெழுத்து.

அருவா என்பதும் மூன்றெழுத்து,
மதுரை என்பதும் மூன்றெழுத்து,
திருமா என்பதும் மூன்றெழுத்து,
குருமா என்பதும் மூன்றெழுத்து,
வருமா என்பதும் மூன்றெழுத்து
ஆட்சி என்பதும் மூன்றெழுத்து.

திமுக என்பதும் மூன்றெழுத்து,
பாமக என்பதும் மூன்றெழுத்து,
விசிக என்பதும் மூன்றெழுத்து,
நமீதா என்பதும் மூன்றெழுத்து.

மூன்று என்பதும் மூன்றெழுத்து.

மேல கூறப்பட்ட எல்லாவற்றையும் கோர்வையாக பார்க்க முடியுமானால் நீங்களும் தமிழர் தான், இல்லையேல் கூட நீங்கள் தமிழர் தான் அதான் கஷ்ட பட்டு ஏதோ சொல்ல வரப்போறான்னு படிச்சுட்டீங்களே .


டிஸ்கி: இந்த மூன்றெழுத்து விவ(கா)ரத்திற்கும், இன்று பிறந்த நாள் கொண்டாடும் எவருக்கும் சம்மந்தம் இல்லை.
Sunday, June 2, 2013

மீள்வரவு

மிக நீண்ட நாட்களாக அமைதியாக இருந்தேன் (அதான்பா நான் பதிவு எதுவும் போடலைன்னு அர்த்தம்). சமீப காலங்களில் வேலை எதுவும் இல்லாததால் (வேலை தேடும் வேலயைத்தவிர) மீண்டும் தமிழ் பதிவுலகில் காலடி எடுத்து வைக்கலாம் என்று அடியேன் முடிவெடுத்துவிட்டேன். அடியேன் மீண்டும் பதிவுலகில் தடம் பதிக்க (ஏதோ முன்னாடி பெருசா தடம் பதிச்சியான்னுல்லாம் கேட்க கூடாது) வாசகர்கள் அனைவரின் ஆசிர்வாதத்தையும் ஆதரவையும் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,


வணக்கம்.
Saturday, February 16, 2013

அவன் - இவன்


ஆங்கில பத்திரிகைகளில் குழு புகைப்படம் வந்தாலும், என் தனி புகைப்படம் எப்பொழுது வரும் என்று வினவிய மிக பிரபல பதிவர் ஒருவரிடம் பேசி மிக நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. நான் விமர்சனம்/பாராட்டு எழுத நினைக்கும் படத்தை எல்லாம் எழுதி முடித்துவிட்டு லிங்க் போடும் இன்னொரு பிரபல பதிவரிடமும் பேசி நாள் ஆகிவிட்டது. மிக நீண்ட காலமாக எழுதாமல் இருக்கும் இன்னொரு பிரபல பதிவரிடமும் பேசி நாள் ஆகிவிட்டது. இத்தனை நாள் அப்படி என்ன தான் செய்து கொண்டிருந்தேன்? முகநூல் பக்கம் வந்தாலும் எதுவும் பெரிதாக ஷேர் செய்யாமல் மொக்கை ஆங்கில பதிவுகளை ஏன் எழுதினேன்? இது என் ஆகச்சிறந்த பதிவு என்று ஏன் ஆட்டோபிக்சன் எழுதினேன்?

இதற்க்கெல்லாம் பதில் தெரியாமல் தான் இந்த பதிவை எழுதுகிறேன். ஆட்டோ பிக்சன் என்ற பெயரில் கூட்டாளிகளை திட்டினால் தான் மனம் ஆறும் என்று சொல்லிக்கொண்டு ஏதோ உளறிக்கொண்டிருந்தேன். மீண்டும் சுய நினைவு வரும் பட்சத்தில் அல்லது வந்த பட்சத்தில் ஒரு நல்ல பதிவு எழுத வேண்டும் என்ற அவா தோன்றியது. இப்பதிவில் நான் எப்பொழுதும் போல் அல்லாமல் நேராக என்ன கூற விழைகிறேன் என்று யோசித்த பின் எழுத ஆரம்பிக்க நினைத்தேன், ஆனால் வழக்கம் போல் இப்பொழுதும் அதையே சுத்தி வளைத்து, நிமிர்த்தி மடக்கி கூறிக்கொண்டிருக்கின்றேன்.

சமீப காலமாக ப்ராஜெக்ட் என்ற பெயரில் மதிப்பெண் வேட்டை நடந்துகொண்டிருக்கின்றது. நானும் எதை எப்படி செய்தால் எனக்கு தேவையான மதிப்பெண்ணை அடைவது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் அளவு தாழ்ந்துவிட்டேன். இப்பொழுது நினைக்கும்பொழுது முதல் வருடம் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறிய ஆர்வக்கோளாறு என் கண்ணை விட்டு மறையவில்லை, சென்ற வாரம் வரை அவன் இருந்தான் என்பதையும் கூற விழைகிறேன். இந்த வாரம் அவனது ஆர்வத்திற்கு சிறிது இடைவேளை கொடுக்கும் பொருட்டு அவனை உறங்கச்சொல்லிவிட்டு வந்தவன் தான் இவன். அவனது ஆர்வம், சாதிக்க வேண்டும் என்ற மேலோங்கிய எண்ணம், அறிவுசார் பொறியியல் மற்றும் அறிவுசார் நிர்வாக அறிவியல் ஆகியவற்றில் செய்யா வேண்டியதாக கூறியதை இவன் மறந்துவிட்டான். இவனது எண்ணம் எல்லாம் ஒன்றே ஒன்று தான், “போட்ட காச எடுக்க வேணாமா?”, “முதலுக்கே மோசம்னா எப்படி?”.

இவன் செய்யும் செயல்கள் எல்லாம் அவனுக்கு வருத்தம் கொடுத்தாலும், அவன் செயலிழந்து கிடக்கின்றான். அவனது நேரம் பறிபோய் விட்டது. இனிமேல் அவனால் நிலைமையை சீர் செய்ய முடியாது என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. அவன் பீஸ் பிடுங்கப்பட்ட ரோபோட், இவனோ கனக்சன் கொடுக்கப் பட்ட ஜெராக்ஸ் மிஷின். இப்போது ஜெராக்ஸ் மிஷின் தான் தேவை என்பதை உணர்ந்த அவன் இவனிடம் வேலையைக் கொடுத்து விட்டான்.

இதன் மூலம் நான் கூற விரும்பும் கருத்து “நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்”.இன்னும் புரியும்படி கூற வேண்டுமானால் “நானும் சொந்த ப்ராஜெக்ட் பண்ணல, ஆன கடையிலையும் வாங்கல”.
Saturday, January 19, 2013

முஹம்மது பின் துக்ளக்


முஹம்மது பின் துக்ளக், இந்த பெயரைக் கேட்டால் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது “சோ” என்ற ஒரே ஒரு வார்த்தை. இந்த படத்தைப் பற்றி நானும் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன், சமீபத்தில் தான் You Tubeல் முழு படம் கிடைக்கிறது அதுவரை torrent கூட கிடைக்காமல் இருந்தது. இம்முறை நான் நன்றி கூற விரும்புவது மாடர்ன் சினிமாஸ் மதுரையிர்க்கு, அவர்கள் புண்ணியத்தில் ஒரிஜினல் டிவிடி வாங்கி பார்க்க முடிந்தது. அதை தவிர இந்தப் படத்தைப் பற்றி விக்கியில் தேடினால் கூட நண்பர் சில்வியன் அவர்கள் எழுதிய பதிவு மட்டுமே என் கண்ணுக்கு எட்டியது. சோ அவர்களைப்பற்றி பேசினாலே நினைவிற்கு வரும் துக்ளக்கைப் பார்த்த பின் தான் அதன் பெயர்க்காரணம் புரிந்தது.
Sunday, January 13, 2013

போகி



இந்த ஆண்டு துவங்கியது முதல் தமிழ் பதிவு ஏதும் எழுதவில்லை. இன்றைய தினமான போகியில் நான் எரிக்க, துறக்க வேண்டிய பலவற்றை பற்றிக் கூறலாம் என்று முடிவெடுத்து எழுத ஆரம்பித்தது தான் இந்த பதிவு. உண்மையில் நம் வாழ்வில் நாம் எடுக்கும் பல முடிவுகளுக்காக நாம் வருந்தும் நேரம் ஒவ்வொரு வருட இறுதி. நாம் நம்முள் இருக்கும் பல பழக்கங்களையும், எண்ணங்களையும், பண்பியல்பையும், மனப்பாங்கையும் மாற்ற நினைப்போம். அது தான் நமது எதிரி என்பதையும் நன்கு அறிந்திருந்தும் அதை மாற்ற நமது அகம் இடம்கொடுக்காது. நமது ஆன்மாவின் இயல்பை அகங்காரம் என்ற எண்ணம் கெடுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல் ஆன்மா இல்லாத உயிர் என்ற முரணை உருவாக்குகிறது. வாழ்வின் சிறந்த முரண் இது தான் என்றாலும் இதை ரசிக்க முடியாத அளவு அதன் வீரியம் இருக்கும்