Tuesday, November 26, 2013

Krrish 3 - இப்போது தமிழில்

என்னுடைய கெரசின் (அதான்பா மாமா பையன் இனி அண்ணன் என்றே வைத்துக் கொள்வோம்) திருமணத்திற்கு சென்ற வாரம் கும்பகோணம் சென்றிருந்தேன். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில். திருமணம் விமரிசையாகத் தான் நடந்தது. மணநாளிற்கு முதல் நாள் என் இரு தோழர்கள் வந்திருந்தனர். ஒருவர் காவல் துறை மற்றவர் கல்வித் துறை. அவர்களை எனக்கு முன்னமே தெரியும் என்பதாலும் எனக்கு வேறு வேலை இல்லை என்பதாலும் அவர்களோடு மாலை முதல் சுற்றிக்கொண்டு இருந்தேன். அன்று இரவு பணம் தீர்ந்து விட்டதால் கல்வித் துறை ATM தேடி அலைந்து கொண்டிருந்தார், அவரோடு நானும் காவல் துறையும் அலைந்து கொண்டிருந்தோம். அம்மா புண்ணியத்தில் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்தது அதனால் எதிரில் இருந்த ATMமை இரண்டே மணி நேரத்தில் கண்டுபிடித்து விட்டோம். அப்பொழுது மணி இரவு 10 அப்படியே சென்று உறங்க எங்கள் மூவருக்கும் உறக்கம் வரவில்லை. அப்படியே அலைந்து கொண்டிருக்கையில் பக்கத்தில் ஒரு திரை அரங்கம் கண்ணுக்கு தென்பட்டது. அது எவ்வ்வளவு பெரிய துர்பாக்கியம் என்பதை அப்போது நாங்கள் அறியவில்லை.


திரையரங்கில் க்ரிஷ் 3 என்ற மொழிமாற்று படம் ஓடிக்கொண்டிருந்தது. சரி வந்து விட்டோம், 50 ருபாய் தான் டிக்கெட் என்பதாலும் சரி போகலாம் என்று சென்றோம். சரியாக பத்து மணி பதினைந்து நிமிடங்களுக்கு மணி அடிக்கப்பட்டது. அது தான் எல்லோருக்கும் தப்பிக்க அடிக்கப் பட்ட கடைசி எச்சரிக்கை மணி என்பது அப்போது எங்களுக்கு புரியவில்லை. படம் ஆரம்பித்தது, லயன் கிங் படத்தின் இசையை டிங்கரிங் செய்த இசை ஒலித்தது. நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடித்துக்கொண்டிருந்தார். பின்னர் ஹன்ஸ் ஜிம்மரின் மேன் ஆப் ஸ்டீல் இசையும் டிங்கரிங் செய்தது ஒலித்தது. இப்படியே உலகத்தை காப்பாற்றிக் கொண்டிருந்தார் நாயகன். இப்ப இந்த படத்துக்கு வில்லன் இல்லாட்டி யாருனாச்சும் சண்ட போட வேணும்னு நம்ம படத்தின் இயக்குனர் அதான் நம்ம ஹீரோவோட அப்பா நெனைக்குறார் அதால விவேக் ஒபராய்னு ஒருத்தர அழைத்து வருகிறார். அவரு யாருன்னா X- MENல வர ப்ரொபஸர் X மற்றும் மேக்னிடோ சேர்த்து கால்னு தயார். ஹீரோ பையனாச்சேன்னு இன்னும் சில பல X- MENல வரும் பாத்திரங்களை போட்டு சண்டை போட விடுகிறார் இயக்குனர் அப்பா. உடனே நாயகனின் சித்தப்பா, “எனக்கு வேலை ??” என்றவுடன் பெருந்தன்மையுடன் சில பாட்டுக்களைப் போட இடம் கொடுக்கிறார். ஹீரோ வேற நல்லா நடனம் ஆடுவாருன்னு வில்லி கூடல்லாம் ஆட விடுறது கொஞ்சம் ஓவர். இருந்தாலும் இதயெல்லாம் சகிக்துக்கொண்டு பார்த்தால் ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. இரண்டரை மணி நேரத்தை எப்படி கடத்த என்று எண்ணி பக்கத்தில் பார்த்தால் கல்வி உறக்கத்தில் இருந்த்தார், காவல் துறை பழக்க தோஷத்தால் விழித்திருந்தார். படம் ஒடிக்கொண்டிருந்தது, ஒடிக்கொண்டிருந்தது, ஒடிக்கொண்டிருந்தது ஒடிக்கொண்டே இருந்தது. ஒரு வழியாக வில்லன் சக்கர நாற்காலியை விட்டு எழுகிறார் ஆனாலும் நாம் 50 ருபாய் நாற்காலியை விட்டு எழ முடியவில்லை. சமீபத்திய சூப்பர் ஹீரோ படங்களைப்போல் நாயகன், வில்லன் இருவரும் இணைந்து நகரத்தை துண்டு துண்டாக்குகின்றனர். நகரத்தை அழிக்கும் வரை பொருத்திருக்கும் நாயகன் பத்து இருபது கட்டிடம், சில பல வாகனங்கள் இது பற்றாக்குறைக்கு Brand Placement வேறு. இதெல்லாம் முடிந்ததும் வில்லனை அழிக்கிறார் படம் முடிகிறது.

இப்படத்தில் ஹாலிவுட்டைப் போன்று எடுக்க முனைகிறோம் என்பதை சரியாக செய்துள்ளார் இயக்குனர். அங்கு வந்த அனைத்து சூப்பர்ஹீரோ படத்துக் காட்சிகளையும்/டெம்ப்லேட்களயும் இதில் காணுவதோடு மட்டும் அல்லாமல் Brand Placemntல் அவர்களையும் மிஞ்சி விட்டார் இயக்குனர். இதில் நாயகருக்கு பவர் கூடிவிட்டது என்று கோடிட்டு காமித்துள்ளார், அதாவது இனி எல்லா படத்தில் இருந்தும் காட்சிகளை எடுக்கலாம்/ உருவலாம்/ ட்ரிபியூட் குடுக்கலாம்.  வில்லனை விட அடி பலமாக வாங்கியது ஆடியன்ஸ் தானோ என்ற சந்தேகம் ஆனால் வில்லனின் வலியை அறிய வைக்கும் பின் நவீனத்துவ குறியீடாக இருக்கலாம் என்பதால் அதை குறை கூறாமல் மீண்டும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தோம்.


மண்டபம் வந்த பிறகு தான் தெரிந்தது கதவு தாழிடப்பட்டிருக்கிறது என்று. கதவைத் தட்டிப் பார்த்தோம், உள்ளே இருந்த நண்பருக்கு கால் செய்து பார்த்தோம் எதுவும் நடக்கவில்லை. சரி பின்வாசல் வழியாக மாடிக்குச்சென்று திறக்கலாம் என்றும் முயன்று தோற்று மீண்டும் முன் வாசல் வந்த போது தான் சன்னல் திறந்து இருப்பதை அறிந்து காவல் துறை ஏற முற்பட்டார் ஆனால் உயரமாக இருந்ததால் இயலவில்லை. சுற்றும் முற்றும் தேடி பக்கத்தில் இருந்த சைக்கிளை எடுத்து அதன் மேல் ஏறி ஒரு வழியாக உள்ளே சென்றார் பின்னரே எங்களுக்குத் தெரிந்தது அது தள்ளும் கதவு இல்லை இழுக்கும் கதவு என்று, அதாவது திறந்து இருந்த கதவை திறக்க முடியாமல் திண்டாடிக் கொண்டு உள்ளே சென்று உறங்கினோம். இப்பத்தியில் உள்ளதற்கும் மேலே உள்ள பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி ஏதும் குறியீடு இருப்பின் கூறவும். அடியேனும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 

டிஸ்கி : நாங்கள் சென்றது வியாழன் இரவு, அன்று அச்சிற்றூரில் ஒரு மொழி மாற்றுப் படத்திற்கு இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

நன்றி : விக்கிபீடியா (போஸ்டர்)

0 comments:

Post a Comment