இந்த ஆண்டு துவங்கியது முதல் தமிழ் பதிவு ஏதும் எழுதவில்லை. இன்றைய
தினமான போகியில் நான் எரிக்க, துறக்க வேண்டிய பலவற்றை பற்றிக் கூறலாம் என்று
முடிவெடுத்து எழுத ஆரம்பித்தது தான் இந்த பதிவு. உண்மையில் நம் வாழ்வில் நாம்
எடுக்கும் பல முடிவுகளுக்காக நாம் வருந்தும் நேரம் ஒவ்வொரு வருட இறுதி. நாம்
நம்முள் இருக்கும் பல பழக்கங்களையும், எண்ணங்களையும், பண்பியல்பையும், மனப்பாங்கையும்
மாற்ற நினைப்போம். அது தான் நமது எதிரி என்பதையும் நன்கு அறிந்திருந்தும் அதை
மாற்ற நமது அகம் இடம்கொடுக்காது. நமது ஆன்மாவின் இயல்பை அகங்காரம் என்ற எண்ணம் கெடுத்துவிடுவதோடு
மட்டுமல்லாமல் ஆன்மா இல்லாத உயிர் என்ற முரணை உருவாக்குகிறது. வாழ்வின் சிறந்த
முரண் இது தான் என்றாலும் இதை ரசிக்க முடியாத அளவு அதன் வீரியம் இருக்கும்
என்பதற்கு சான்று தேவை இல்லை. என் எழுத்தில் எப்பொழுதும் உருவகம் மிகையாக
இருக்கும், இணை வார்த்தைகளும் மிகையாக இருக்கும். இவை எனது பாணி என்று கூறினாலும்
இது எனக்கு கூறியது என்னவென்றால் ஒரு விஷயத்தை நேராக கூற முடியாமல் இணை தேடி
அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்பதே. இணை தேடுதல் என்பது சரியான நிலை இல்லை என்பதை
தெரிந்துகொண்டும் அப்பாணியை மீண்டும் பயன்படுத்துதல் உண்மை நிலையில் இருந்து என்னை
விடுவித்துக்கொண்டு எனக்கென ஒரு புதிய உலகை உருவாக்கும் முயற்சி என்பதே உண்மை.
இந்நிலை எவ்வித பிரச்சனையும் சமாளிக்காமல் அப்பிரச்சனை இல்லவே இல்லை என்ற போலி
நிலையை என்னுள் உருவாக்கி என்னை சாந்தப்படுத்தும் நிலையை உருவாக்குகிறது. இதை ஒரு
கூற்றில் யதார்த்த உருதிரிபு புலம் என்று கூட கூறலாம். இணையினால் இப்புலதிருந்து
அகன்று யதார்த்தை மறைக்கும் நிலை உண்மையிலேயே யோசிக்க வேண்டிய நிலை. இணை தேடுதல்
என்ற எண்ணம் அகன்றாலொழிய முன்னேற்றம் மட்டுமல்லாமல் உண்மை மகிழ்வை உணர்வதென்பது
இயலாத காரியம் ஆகிவிடும். இவ்வாறு இருக்கும் முதல் பண்பியல்பை இன்றோடு
எரிக்கிறேன். இது தான் நான் போகிக்கு எரிக்கும் முதல் பண்பு.
கோவம், இது என் வாழ்வில் நான் எதையெல்லாம் பெற்றிருக்க வேண்டுமே
அதையெல்லாம் உண்டு வாழ்ந்து வளர்ந்து இன்று பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
இந்த ஒட்டுண்ணியால் வாழ்வில் நான் மட்டுமல்ல பலரும் பல வகையில் பாதிக்கப்பட்டிருப்பார்.
இந்த கோவம் சில இடங்களில் மட்டுமே கூட்டுண்ணியாக அமைவதுண்டு. நான் இந்த
ஒட்டுண்ணியை கூட்டுண்ணியாக மாற்ற முனைகிறேன். இதை எரிக்கும் அளவுக்கு நான் ஒன்றும்
ஞானி அல்ல.
மூன்றாவது இதை நான் கண்டிப்பாக எரித்தே ஆக வேண்டும் என்ன என்பது என்
நண்பர்கள் அனைவருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தமிழ் கூறும் நல்லுலகில் இதை
நான் என் முன்னேற்றத்திற்கு இடையூறு என்றோ தடை என்றோ கூறுதல் இழுக்கு இருந்தும்
இக்கொள்கை எனது தனிப்பட்ட நிலையில் இருந்து பார்க்கும்பொழுது இடையூராகவே தென்படுகின்றது.
ஆகவே இதை நான் இடையூறு என்றோ இழுக்கானதென்றோ கூற இயலாது ஆனால் என்னை
பொருத்தமட்டில் இது எனது முன்னேற்றம் என்று கூறிக்கொள்ளும் விஷயத்திற்கு இடையூறாக
இருப்பதினால் இதையும் தவிர்க்க வேண்டிய நிலையில் உள்ளேன். இந்த போகியில்
இவையனைத்தையும் எரிப்பதனால் சுகாதாரக்கேடு எதுவும் ஆகமால் போகி கொண்டாடும்
மகிழ்ச்சியில் உள்ளேன்.
பச்சை போகி வாழ்த்துக்கள்(அதாங்க Green Bhogi).
0 comments:
Post a Comment