Friday, December 27, 2013

பிரியாணி

நான் அடிப்படையிலேயே சைவம் என்பதால் இந்த பிரியாணியில் பீஸ் இல்லை, இது பிரியாணியே இல்லை குஸ்கா என்றெல்லாம் எழுதப் போவதில்லை. சில பல ஓட்டைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு நல்ல பிரியாணியே. எப்பொழுதும் என்னைப் போன்ற இணைய எழுத்தாளர்கள் எழுதும் வார்ப்புருவில்/நியமத்தில்/டெம்ப்ளேட்டில் இப்போழுதைய மையநீரோட்ட எழுத்தாளர்கள் எழுதுவதால், அவர்களின் டெம்ப்ளேட்டில் நான் எழுதும் நிலைமை வந்துவிட்டது. படத்தின் கதையை இத்தனை நேரம் எல்லோரும், பார்த்து, படித்து, கேட்டு தெரிந்து கொண்டிருப்பீர்கள் ஆதலால் அதைப் பற்றி பேசுவதில் பயனில்லை.

இப்படம் பகடியின் உச்சம். அதுவும் பல இடங்களில் தான் பகடி செய்வதையே பகடி செய்துள்ளார் இயக்குனர். ஆரம்பத்தில் கதை மெதுவாக போகிறது, பாடல்கள் பல இடங்களில் இடைஞ்சலாக இருந்தாலும், ஹாரிஸ் ஜெயராஜ் சில பல இடங்களில் ஜொலிக்கிறார். இதர பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கவனித்துக் கொண்டுள்ள யுவன் அவர்களும் தேவையானதையே கொடுத்துள்ளார். இப்படம் நடிகர் கார்த்தியின் சீரான தோல்விக்கு தடைக்கல்லாய் அமைந்தது வருத்தத்திற்குறிய செய்தி தான் என்றாலும் ஒரு படம்தானே, போகட்டும். இது ஒரு குடும்பப் படம். வெங்கட் பிரபு அவரின் முந்தைய பட நடிகர்கள் பலரையும் இதில் கவுரவத் தோற்றத்தில் அழைத்திருப்பது அவரின் பெருந்தன்மயைக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் வழக்கமாக வரும் சம்பத், ப்ரேம்ஜி மற்றும் குழுவினர் இப்படத்திலும் உண்டு என்பதை எல்லாம் சொல்லிதெரிய வேண்டிய அவசியமே இல்லை. தன் தம்பி மீது உள்ள அதீத பாசத்தின் வெளியீடே இப்படம் என்றும் கூறலாம். அவரை வெறும் தம்பியை படம் நெடுக அழைத்து வரும் இயக்குனர் என்று கூறுவது அவரின் மேன்மையான செயலை இகழும் செயல். சென்ற படத்தில் தல அசீத்தையே தன் தம்பி போல் கை வித்தைக் காட்ட வைத்த அவர் இப்படத்தில் பழம்பெரும் நடிகர் நாசரை ப்ரேம்ஜியாகவே வாழ வைத்துவிட்டார். அப்பெரும் நடிகருக்கு ஐஸ் வைத்துத் தான் இப்படியெல்லாம் செய்திருப்பார் என்பதன் குறியீட்டைக் கூட நாம் காணும்படி அவரை படம் நெடுக ஐஸ் பெட்டியிலேயே வைத்து நமக்கு உணர்த்தி இருப்பார். படத்தை தயாரித்திருப்பதும் நாயகனின் குடும்பமே என்பது படத்தின் கூடுதல் குடும்பச் சிறப்பு. படத்தில் நாயகன் அதிக நேரம், அதிக முறை, சண்டை போடுவது நடிகை உமா ரியாஸ் அவர்களுடன் தான். இதன் மூலம் பின்நவீத்தமாக ஆண்கள் தான் ஹிட்மேன் என்பதை மாற்றி, அவரை ஹிட்வுமனாக்கி பாரம்பரிய எண்ணங்களை கட்டுடைத்திருப்பார்.


இவ்வளவு பெருமை உடைய இப்படத்தில் லாஜிக் ஓட்டைகளே இல்லையா, குழப்பமே இல்லையா என்றால் இருக்கிறது. பல ஓட்டைகள். உதாரணமாக சிலவற்றை இங்கு நான் முன்வைக்கின்றேன். அவை – படத்தில் சாம் ஆண்டர்சனின் பெயர் – சாம், படவா கோபியின் பெயர் – கோபி, ராமகிருஷ்ணனின் பெயர் – விஜயகிருஷ்ணன் ஆனால் ஜெயப்பிரகாஷின் பெயர் – சம்பத், சம்பத்தின் பெயர் – ரியாஸ், உமா ரியாஸிற்கு பெயரே இல்லை. அதனால் சம்பத் என்றால் யாரை என்ற குழப்பம் படம் நெடுக ஓடுகிறது. இவ்வாறு பல லாஜிக் ஓட்டைகள். இருந்தும் ரசிக்கலாம். இப்படம் வெற்றி அடையக் காரணம் என்ன என்பதை கீழே உள்ள புகைப்படத்தின் குறியீடு கூறும்.

நன்றி : விக்கிபீடியா (புகைப்படம்).

0 comments:

Post a Comment