Friday, December 27, 2013

பிரியாணி

நான் அடிப்படையிலேயே சைவம் என்பதால் இந்த பிரியாணியில் பீஸ் இல்லை, இது பிரியாணியே இல்லை குஸ்கா என்றெல்லாம் எழுதப் போவதில்லை. சில பல ஓட்டைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு நல்ல பிரியாணியே. எப்பொழுதும் என்னைப் போன்ற இணைய எழுத்தாளர்கள் எழுதும் வார்ப்புருவில்/நியமத்தில்/டெம்ப்ளேட்டில் இப்போழுதைய மையநீரோட்ட எழுத்தாளர்கள் எழுதுவதால், அவர்களின் டெம்ப்ளேட்டில் நான் எழுதும் நிலைமை வந்துவிட்டது. படத்தின் கதையை இத்தனை நேரம் எல்லோரும், பார்த்து, படித்து, கேட்டு தெரிந்து கொண்டிருப்பீர்கள் ஆதலால் அதைப் பற்றி பேசுவதில் பயனில்லை.

இப்படம் பகடியின் உச்சம். அதுவும் பல இடங்களில் தான் பகடி செய்வதையே பகடி செய்துள்ளார் இயக்குனர். ஆரம்பத்தில் கதை மெதுவாக போகிறது, பாடல்கள் பல இடங்களில் இடைஞ்சலாக இருந்தாலும், ஹாரிஸ் ஜெயராஜ் சில பல இடங்களில் ஜொலிக்கிறார். இதர பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கவனித்துக் கொண்டுள்ள யுவன் அவர்களும் தேவையானதையே கொடுத்துள்ளார். இப்படம் நடிகர் கார்த்தியின் சீரான தோல்விக்கு தடைக்கல்லாய் அமைந்தது வருத்தத்திற்குறிய செய்தி தான் என்றாலும் ஒரு படம்தானே, போகட்டும். இது ஒரு குடும்பப் படம். வெங்கட் பிரபு அவரின் முந்தைய பட நடிகர்கள் பலரையும் இதில் கவுரவத் தோற்றத்தில் அழைத்திருப்பது அவரின் பெருந்தன்மயைக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் வழக்கமாக வரும் சம்பத், ப்ரேம்ஜி மற்றும் குழுவினர் இப்படத்திலும் உண்டு என்பதை எல்லாம் சொல்லிதெரிய வேண்டிய அவசியமே இல்லை. தன் தம்பி மீது உள்ள அதீத பாசத்தின் வெளியீடே இப்படம் என்றும் கூறலாம். அவரை வெறும் தம்பியை படம் நெடுக அழைத்து வரும் இயக்குனர் என்று கூறுவது அவரின் மேன்மையான செயலை இகழும் செயல். சென்ற படத்தில் தல அசீத்தையே தன் தம்பி போல் கை வித்தைக் காட்ட வைத்த அவர் இப்படத்தில் பழம்பெரும் நடிகர் நாசரை ப்ரேம்ஜியாகவே வாழ வைத்துவிட்டார். அப்பெரும் நடிகருக்கு ஐஸ் வைத்துத் தான் இப்படியெல்லாம் செய்திருப்பார் என்பதன் குறியீட்டைக் கூட நாம் காணும்படி அவரை படம் நெடுக ஐஸ் பெட்டியிலேயே வைத்து நமக்கு உணர்த்தி இருப்பார். படத்தை தயாரித்திருப்பதும் நாயகனின் குடும்பமே என்பது படத்தின் கூடுதல் குடும்பச் சிறப்பு. படத்தில் நாயகன் அதிக நேரம், அதிக முறை, சண்டை போடுவது நடிகை உமா ரியாஸ் அவர்களுடன் தான். இதன் மூலம் பின்நவீத்தமாக ஆண்கள் தான் ஹிட்மேன் என்பதை மாற்றி, அவரை ஹிட்வுமனாக்கி பாரம்பரிய எண்ணங்களை கட்டுடைத்திருப்பார்.


இவ்வளவு பெருமை உடைய இப்படத்தில் லாஜிக் ஓட்டைகளே இல்லையா, குழப்பமே இல்லையா என்றால் இருக்கிறது. பல ஓட்டைகள். உதாரணமாக சிலவற்றை இங்கு நான் முன்வைக்கின்றேன். அவை – படத்தில் சாம் ஆண்டர்சனின் பெயர் – சாம், படவா கோபியின் பெயர் – கோபி, ராமகிருஷ்ணனின் பெயர் – விஜயகிருஷ்ணன் ஆனால் ஜெயப்பிரகாஷின் பெயர் – சம்பத், சம்பத்தின் பெயர் – ரியாஸ், உமா ரியாஸிற்கு பெயரே இல்லை. அதனால் சம்பத் என்றால் யாரை என்ற குழப்பம் படம் நெடுக ஓடுகிறது. இவ்வாறு பல லாஜிக் ஓட்டைகள். இருந்தும் ரசிக்கலாம். இப்படம் வெற்றி அடையக் காரணம் என்ன என்பதை கீழே உள்ள புகைப்படத்தின் குறியீடு கூறும்.

நன்றி : விக்கிபீடியா (புகைப்படம்).

Wednesday, December 4, 2013

Fast and furious 6

யுனிவர்ஸல் ஸ்டூடியோவில் சில பல வருடங்களுக்கு முன்னால். பெரியண்ணாச்சி மற்றும் சின்னணாச்சி டிஸ்கஷன்.

பெ: - பெரியண்ணாச்சி. சி – சின்னண்ணாச்சி.

சி: அண்ணே, புதுசா ஒரு பட்த்துக்கு ஸ்டுடியோவில செட் கேக்குறாங்க. ரொம்ப நெறைய எடம் வேணுமாம், 500 கோடி பட்ஜெட் போல அப்படியே நாமளே டிஸ்ட்ரிபியூஷன் பண்ணிரலாம்னு சொல்றாங்க.

பெ: அது சரி, யாரு நடிக்குறா? யாரு டைரக்‌ஷன்?

சி: அது எதோ பெரிய எடம் போல, டீடைல்ஸ் சொல்ல மாட்ராய்ங்க.

பெ: சரி சரி, என்ன எழவோ, டிஸ்ட்ரிபியூஷன் பத்தி அப்புறம் பாதுக்கலாம் மொதல்ல செட்ட வாடகைக்கு விடு. அதுக்கப்புறம் மத்ததை பேசிக்கலாம்.

சி: அங்க தான் பிரச்சனை, நாம போன படத்துக்காண்டி வாங்குன கார்லாம் நெரயா இருக்கு. எல்லாம் காஸ்ட்லி காரு, எடைக்குக் கூட போட முடியாது.

பெ: அடப்பாவி, சரி என்ன பண்ணலாம்?

சி: அது தான் எனக்கும் தெரியல!!

பெ: ஏய்! அந்த நீல் மோரிட்ஸ் பயலை கூப்புடு, அவன் ரேஸ் கார் படமா எடுப்பான்ல. 5 படம் வந்துருச்சு, ஆறாவத எடுக்க சொல்லிருவோம்.

சி: சூப்பர் ஐடியா அண்ணே!!


அடுத்ததாக அண்ணன் நீல் ஸ்டுடியோ வருகை மற்றும் படத்துவக்கம்.

பெ: வாங்க தம்பி.

நீல்: வணக்கம்ணே, அடுத்த படம் எடுக்க கூப்டீங்களாம்ல.

பெ: ஆமாம்பா, அந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்ல அடுத்த படம் எடுதுறலாமா?

நீல்: சரிண்ணே பண்ணிரலாம், கதைய துபாய்க்கு எடுத்துட்டுப் போய்ரலாம்னு இருக்கோம்.

பெ: நோ, நோ இங்கிலாந்துக்குப் போய்டு. அங்க நமக்கு நெறய காரு இருக்கு, உன் வேல படத்துல எல்லாத்தயும் யூஸ் பண்ணுற. முடிஞ்சா ஒடைச்சு போட்டுரு.

நீல்: சரிண்ணே.

பெ: அப்புறம் இந்த படம் ஓடுச்சுன்னா அடுத்து நீ துபாய் போகலாம். ஒண்ணும் பிரச்சனை இல்லை. அதே போல அந்த ஜப்பான்காரன் இந்த படத்துல இருக்கானா?

நீல்: ஆமாண்ணே. ராக், வின் டீஸல், பால் வாக்கர் எல்லாரும் நீங்க போன வாட்டி சொன்னாப்புல அந்த புள்ள மிஷேல் ரோட்ரிக்ஸயும் சேர்த்துக்கிடாச்சு.

பெ: சரி சரி, அடுத்த படத்துல ஜப்பான் காரன தூக்கிடு. இங்கிலாந்துன ஒடனே தான் நெனவுக்கு வருது, அந்தூருல ஒருத்தன் நல்லா காரு ஓட்டுவானே. அதான்பா அவன் ஒரே ஆளா காரு மட்டுமே ஓட்டி படத்த ஓட்டுவானே அவனையும் சேத்துக்க வேண்டியதுதான.

நீல்: ஜேஸன் ஸ்டாத்தம் தான சொல்றீங்க சேர்த்துகிடலாம், அவரையே இந்த படத்துல காமியோ வர வெச்சு ஜப்பான் காரன தூக்கிடலாம்.

பெ: சூப்பர் பா, காரையெல்லாம் நாளைக்கே ஒடைக்க ஆரம்பிச்சுரு.

நீல்: என்னது?

பெ: அதான் பா, ஷூட்டிங் சீக்கிரமே ஆரம்பிச்சுருன்னு சொன்னேன். (நல்ல வேளை உண்மை தெரியல, படத்துக்கு படம், காருக்கு காரு, காசுக்கு காசு, பெரியண்ணன் ஹேப்பி.)

அதே நேரத்தில் ஜஸ்டின் லின் கைப்பேசியில்,
ஜ: ஹலோ நீல், மச்சி, ஒரு வழியா யுனிவர்சல் காரனுங்கள ஏமாத்தி காரை வாங்கிட்ட போல, நெறையா காரு இருக்கு என்ன சொன்ன ராசா. இந்த வாட்டி எல்லாத்தையும் பத்திரமா குடுத்துருவோம்.

நீல்: போடா டேய், அவனுங்க காரை உடைக்குறதுக்குத் தான் குடுத்துருக்காய்ங்க. இத்த உடைச்சா தான் அடுத்த படம் தருவாய்ங்களாம்.

ஜ: சரி, காப்பாத்துறது தான் கஷ்டம், உடைக்குறது சப்பை மேட்டர். காரை எடுக்குறோம் உடைக்குறோம்.

இவ்வாறாக தொடங்கப்பட்டது தான் Fast and Furious 6. 

டிஸ்கி: இப்பதிவு பால் வால்கருக்கு சமர்ப்பணம்.