சில நாட்களாகவே நான் பதிவெழுத தலைப்பு தேடி அலைந்து
கொண்டிருக்கிறேன்/கொண்டிருந்தேன். இந்த வலைப்பூவிற்கு ஆர்வக்கோளாறு என்று
பெயரிட்டாகிவிட்டது. பெயருக்கேற்றாற்போல் சில ஆர்வகோளாறான பதிவுகளையும் பதிந்து
நானும் பிரபல பதிவர் என்று சபையில் கத்திவிட்டேன். ஆனால் கேட்பாறற்று கிடக்கும்
இந்த வலைப்பூவை பிரபலமாக்குவது எப்படி என்ற கேள்விக்கு பதிலை அறிய நான்
முற்பட்டபோது கண்ணில் தென்பட்ட சில செய்திகள் என்னை திரும்பி பார்க்க
வைத்துவிட்டன. இன்னும் புரியும்படியாக சொல்லப்போனால் நான் எதற்காக எழுத
நினைக்கின்றேன், பலர் எதற்காக எழுதுகின்றனர், இன்னும் சில பல விஷயங்கள் தீர்கமாக
புரிந்தது. இப்பொழு நான் என்ன கூற வருகின்றேன் என்று உங்களுக்கு புரியவில்லை என்று
எனக்கு மிகத்தெளிவாக புரிகின்றது ஏனெனில் நான் என்ன கூற வருகின்றேன் என்று எனக்கே
புரியவில்லை. எனக்கே புரியாத ஒன்றை உங்களுக்கு புரியவைத்துவிட்டால் நான் மாமேதை.
அப்படி நான் கூறுவது உங்களுக்கு புரியவில்லை என்றால் நான் மேதை. இது நான் கண்ட
விஷயங்களில் முக்கியமான ஒன்று. மற்றொன்று இசங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம்
என்பது. வாழ்வில் முக்கியமோ இல்லையோ பதிவில் முக்கியம், இந்த இசங்களில் நாம்
பேசப்போகும் இசத்தைப் பற்றி நன்கு தெரிந்தார்ப்போல பேச வேண்டும். இசங்களில்
முதன்மையாக பேசப்படும் இசம் பெமினிசம் மற்ற சில இசங்களும் உண்டு அவை
எக்ஸிஸ்டன்சியலிசம், சர்ரியலிசம், மேஜிகல் ரியலிசம் இன்ன பல. இல்லை இவையெல்லாம் அதிக
வேலை அதனால் இவற்றைப்பற்றி கூகிள் செய்ய முடியவில்லை என்றால் ஈயவாதி ஆகிவிடுங்கள்.
காந்தியவாதி, பெண்ணியம், இன்னும் பல ஈயம் உள்ளன. அதில் ஒரு ஈயத்தை பயன்படுத்தலாம்.
அடுத்தது உங்கள் ஆதர்ஷ நாயகனை தேர்ந்தெடுக்கவும், சொம்படிக்கவும்
மன்னிக்கவும் அவர் புகழைப் பாடிப் பரிசில் பெறவும் என்று சொல்ல வந்தேன். பிறகு
அந்த ஆதர்ஷ நாயகனுடன் போட்டோ எடுத்துக்கொள்ளவும் அதை ப்ரோபைல் படமாக போடவும்.
அவரின் எதிரி இனி உங்களின் எதிரி விரைவில் நீங்கள் அவரின் கையாளாக(இல்லை இல்லை
கைக்கு எட்டும் தூரத்தில் வர வாய்ப்புண்டு என்று சொல்ல வந்தேன்). அதன் பின்
நீங்கள் ஒரு புத்தகம் கூட பிரசுரிக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் நீங்கள் பதிவராக
மட்டும் அல்ல பிரபல பதிவராக வாய்ப்புண்டு. நீங்கள் மிக குறுகிய காலத்தில் அதி
பிரபல பதிவர் ஆகவேண்டுமென்றால், மேல சொன்ன அனைத்தையும் மிக சிரமப்பட்டு செய்ய
வேண்டாம். மிக சுலபமான ஒரு வழி இருக்கிறது ஆனால் அதில் செல்ல உங்களுக்கு மன தைரியம்,
தடைக்கற்களைத் தாண்டி பயணம் செய்யும் திறன் விடாமுயற்சி, இதற்க்கு எல்லாம் மேல்
நடிப்பு திறன், கண்ணீர் விடும் திறன், ஒன்றுமே செய்யாமல் அப்பாவி போல் முகத்தை
வைத்துக்கொள்ளும் திறன் இதெல்லாம் தேவை. நாட்டு நடப்பு பற்றி ஆழ்ந்த அறிவும் தேவை.
இவை எல்லாம் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று
தான், திட்ட வேண்டும், நன்றாக திட்ட வேண்டும் ஒரு பெரிய பிரபலத்தை திட்ட வேண்டும்,
அவர் திரும்பி பார்க்கும்வரை திட்ட வேண்டும். அவர் பார்க்காவிட்டால் அவரைப்
பார்க்கவைத்து திட்ட வேண்டும். ஜெயிலில் பிடித்து போட்டால் அழ வேண்டும்,
தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க வேண்டும். நியாயம் கேட்க வேண்டும். இவை தான் நான்
தேடித் திரிந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த சில அறிய பொக்கிஷங்கள். இவை
எல்லாவற்றையும் நான் பயன்படுத்தாமல் ஏன் இங்கு பதிவிட்டு எல்லோருக்கும் தருகிறேன்???
“நான் நல்லவங்க”,”எனக்கு நடிக்க தெரியாதுங்க”.
0 comments:
Post a Comment