சென்ற ஞாயிறு சென்னை பதிவர் குழுமம் சார்பாக முதலாமாண்டு நிறைவுக்
கொண்டாட்டச் சந்திப்பு நடந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வீகெஸ் அண்ட்
தாமஸ்(Veekes and Thomas) உணவகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பில்
ஐரோப்பிய உணவை சுவைக்கலாம் என்ற எண்ணத்தில் காலை உணவை குறைத்துக்கொண்டு வயிற்றில்
அதிக இடத்தை சேமித்து வைத்துக்கொண்டேன். சந்திப்பில் முதலில் நுழைந்தவுடன்
எலுமிச்சைச் சாரு தரப்பட்டது. துவக்கி நன்றாக தான் இருந்தது, அத்துடன் அங்கு
நீரில் ஏதோ ஒரு இலை போடப்பட்டு இருந்தது, பிறகு தான் அதன் பெயர் Vermilion Leaves
என்று தெரியவந்தது. அது ஏதோ சுத்திகரிப்பிற்காக என்று மட்டும் எனக்கு புரிந்தது.
அதன் பின் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்ததில் நேரம் சென்றது
தெரியவில்லை. சில மணிநேரங்கள் சென்றவுடன் மூளைக்கு ஒய்வு கொடுத்துவிட்டு பசி தன்
வேலையைக் காட்ட ஆரம்பித்தது. இதே நிலைமை தான் எல்லோருக்கும்போல் பசி தன் வேலையைக்காட்ட
நேரம் தராமல் உணவிற்காக அனைவரும் உட்கார்ந்தாகிவிட்டோம். உணவிற்காக எங்கள்
மேசையில் ஒரு தட்டும் முள்கரண்டியும் இருந்தது. ஐரோப்பிய உணவகம் என்பதால்
துவக்கியாக ஏதேனும் தெரியாத உணவு வகை தரப்படும் என்று எண்ணி காத்திருந்தேன். உணவு
வகையும் வைக்கப்பட்டது, அதைப் பார்த்தபொழுது எங்கும் பார்க்காததுபோல்
தோற்றமளித்தது. சரி துவக்கி எப்படி இருந்தால் என்ன என்று முள்கரண்டியால் எடுத்து
சுவைத்தேன், பின்புதான் தெரிந்தது அது காரட் பஜ்ஜி என்று. சரி என்ன இருந்தாலும்
தக்காளி சாஸுடன் பஜ்ஜி சாப்பிட நன்றாகத் தான் இருந்தது என்று சாப்பிட
ஆரம்பித்தேன். பஜ்ஜி இருவருக்கு ஒரு தட்டில் வைக்கப்பட்டது, அதில் தேவையானதை
எடுத்துக்கொள்ள ஒரு முள்கரண்டியும் வைக்கப்பட்டிருந்தது. பஜ்ஜி வருவதற்குமுன்
கட்லட் போன்றதொரு உணவு வைக்கப்பட்டிருந்தது. அதன் சுவையும் சரி பஜ்ஜியின் சுவையும்
சரி மிக அருமை, என்னதான் ஐரோப்பிய உணவகத்தில் பஜ்ஜி என்ற ஏமாற்றம் இருந்தாலும்
அதன் சுவை ஏமாற்றத்தை மறைத்தது.
Water with Vermilion Leaves |
ஐரோப்பிய உணவகங்களில் தக்காளி சாஸின் சுவையை மட்டும் வேறு எங்கும்
கொண்டுவர முடிவதில்லை, அதன்பொருட்டு எல்லா துவக்கிகளையும் நன்கு உண்டேன். இதில்
என்னுடன் இருந்த நண்பர்கள் எண்ணை என்றாலே தூர ஓடும் குழுவைச் சேர்ந்தோர். அதனால்
தட்டில் உள்ள எல்லா பொருட்களையும் காலி செய்யும் பொறுப்பு என்மீது விழுந்தது,
இருந்தும் அதை என்னால் முழுமையாக செய்ய முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்
ஒன்று துவக்கியை மட்டுமே மிகையாக சாப்பிட்டால் உணவை சாப்பிட இடம் இருக்காது,
இரண்டு முள்கரண்டி. முள்கரண்டியை தட்டில் வைத்துவிட்டார்கள் பெரிய பெரிய
உணவகங்களில் இப்படி தான் சாப்பிட வேண்டும்போல என நானும் மிகவும் முயற்சி செய்தேன்.
இதை எல்லாம் இரண்டு நாற்காலி தள்ளி உட்கார்ந்திருந்த நண்பர் மட்டுமே கூர்ந்து
கவனித்திருக்கிறார், அவர் சொன்னது இது தான்.” ஏன்?? வரலைன்ன கைல எடுத்த சாப்பிடவேண்டியது
தான?” இதையும் மீறி எப்பாடு பட்டாவது முள்கரண்டியில் பஜ்ஜி சாப்பிடவேண்டும் என்று
சபதம் எடுத்து சாப்பிட்டும் விட்டேன்.
அதன்பின் உணவு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டு வகையான உணவுகள்
பரிமாறப்பட்டது, ஒன்று ஸ்பகெட்டி(Spaghetti) மற்றொன்று ரிசோட்டா(Risotta). முதலில்
ஸ்பகெட்டி கொண்டுவரப்பட்டது, அதற்கும் நூடுல்சுக்கும் எனக்கு வித்தியாசம்
தெரியவில்லை. ஒல்லியா இருந்த நூடுல்ஸ். குண்டா இருந்தா ஸ்பகெட்டி என்று அங்கு இரு
ஒரு நண்பர் னே அறியாமையை போக்கினார். இருந்தும் அடுத்த உணவைப்பார்த்துவிட்டு
தேர்வு செய்யலாம் என்று இருந்தேன். இரண்டாவது உணவு ரிசோட்டாவை பார்த்த பிறகு
ஸ்பகெட்டியைத் தேர்ந்தெடுத்தேன். ரிசோட்டாவைப் பற்றி கூறவேண்டும் என்றால் அது
அதிகம் பூண்டு போடப்பட்ட தயிர்சாதம். தயிர்சாதம் சாப்பிட ஐரோப்பிய உணவகமா என்ற
உணர்வில் முந்தய உணவைத் தேர்ந்தேடுத்தேன். உலகப்படம் பிடிக்கும் என்பதால் உலக உணவும்
பிடிக்கும் என்ற என் எண்ணம் தவறு என்று நான் உணர்ந்தேன். இரு உணவையும் சுவைத்து
விட்டேன், என்னால் முடியவில்லை. பெலினியை எதிர்பார்த்து போனேன், கிடைத்தது வேறு
ஒன்று. இது முன்னரே தெரிந்திருந்தால் இன்னும் சில பஜ்ஜிகளை உள்ளே தள்ளி இருப்பேன்.
இனி யோசித்து என்ன பயன் என்று நினைத்து வருந்தி கொண்டிருந்தேன். மீண்டும் மூளைக்கு
வேலை கொடுத்தால் நேரம் சென்றது. இறுதியில் ஐஸ்கிரீம் வந்து உணவை முடித்து
வைத்ததால் பிழைத்தேன்.
Risotta |
சப்போட்டா சுவையுடன் கடைசி நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்த
ஐஸ்கிரீமிற்கு என்னுடைய நன்றியைச் சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன். (“இனிமே
இத்தாலிய, ஐரோப்பிய ரெஸ்டாரன்ட்னு கேப்பா ?????)
புகைப்பட உபயம்: Vid Dev, Bragadeesh Prasanna.