Tuesday, April 15, 2014

மணி தியேட்டர்/ மணி இம்பாலா/ மணி இம்பாலா மல்டிப்லெக்ஸ்

சின்ன வயசுல நான் நாலாப்பு படிக்கும் போது, திருப்பரங்குன்றம் பக்கத்துல இருக்குற ஹார்விபட்டில தான் இருந்தேன். எங்க வீட்டுக்கு பின்னாடி தான் மணி தியேட்டர். 20 பென்ச், 30 சீட், 30 சேர், பெரிய வேட்டித்துணி, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கூறை இது தான் எனக்கு மொத மொத தெரிஞ்ச மணி தியேட்டர். நெனவு தெரியாம பல படம் அதுல அதிகமா சூப்பர் ஸ்டார் படம்தான் போனாலும் என்னோட மொத தியேட்டர் அனுபவம்னு சொல்றது ”கவசம்” அப்படிங்கற படம் தான். அது வேற ஒன்னும் இல்ல ஜாக்கி சான் நடிச்ச ஆர்மர் ஆப் காட் படம் தான். எங்க கராத்தே மாஸ்டர் தான் இந்த படத்துக்குக் கூட்டிட்டு போனாரு. பென்ச்லன்னா 5 ருவா, சீட்லன்னா 10 ருவா. அந்த படத்துக்கு முன்ன வரை ஜாக்கி பத்தி எங்க மாஸ்டர் பல பில்ட் அப் குடுத்து இருந்ததாலயும், போஸ்டர் எல்லாத்துலயும் “ஜாக்கி சான் முதன் முதலில் தமிழில்” அப்படின்னு போட்டதாலயும் போனது. அப்ப டப்பிங்னு லாம் தெரியாது. பாரு ஜாக்கி என்னம்மா தமிழ் பேசுறான்னு வாயப்பொளந்துகிட்டுப் பாத்தேன். அதுக்கப்புறம் புரூஸ் லீ, அர்னால்ட்னு பல டப் பண்ணின, டப் பண்ணாத படங்கள பாக்க முடிஞ்சது அங்க தான். மாப்பிள்ளை வினாயகர், மாணிக்க வினாயகர் தியேட்டர்ல எல்லம் புது படம் வரும் இங்க அரத பழைய படம் தான் ஓடும்.
மணி இம்பாலா மல்டிப்ளெக்ஸ்

இப்படி என்னை பல ஹாலிவுட் படங்கள பாக்க வெச்ச தியேட்டர திடீர்னு மூடிட்டாங்க. இம்பாலா ஹோட்டல்காரவுங்க அந்த தியேட்டர வாங்கினாங்க நெறைய மாற்றம்லாம் செஞ்சு மணி இம்பாலானு பேர மாத்தினாங்க. டிக்கெட் காசு கூடிச்சு, புது படமும் வந்துச்சு. அதுக்கப்புறம் புது படம் பாக்கணும்னு ரொம்ப தொலவு போக வேண்டிய பிரச்சனை இல்லை. முன்ன விட தியேட்டர் நல்லாவே இருந்துச்சு. புது தியேட்டர்ல எதோ தமிழ் படம்தான் பாத்த நியாபகம். முன்னெல்லாம் படம் ஆரம்பிக்கிறதுக்கு பத்து நிமிஷம் முன்ன போனா போதும் ஆன மணி இம்பாலா ஆனதும் வெள்ளென போனா தான் டிக்கெட் கெடைக்குற நெலைமை. இருந்தாலும் வெள்ளென போய் டிக்கெட் வாங்குறதும் சொகமாத் தான் இருந்துச்சு. 
பழைய டிக்கெட் கவுன்டர் மற்றும் புதிய டிக்கெட் கவுன்டர்

அதுக்கப்புறம் நான் காலேஜ் படிக்க சென்னை வந்ததும் திரும்ப மூடிட்டதா கேள்வி பட்டேன், ஏன் எதுக்குன்னு தெரியல அப்புறம் தான் தெரிஞ்சது மணி இம்பாலா இனிமேல் மணி இம்பாலா மல்டிப்ளெக்ஸ்னு. அந்த ஒரே கட்டடத்துல மூணு தியேட்டர். அதுல நான் பாத்த முதல் படம் தசாவதாரம்னு நெனக்குறேன். அதுவும் தியேட்டர்ல எங்க தல ஹிமேஷ் ரேஷம்மியாவுக்கெல்லாம் கட் அவுட் வெச்சதால தான் நியாபகம் இருக்கு. காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்தினதால தான் இன்னும் அந்த தியேட்டர் ஓடுது. இப்ப மாணிக்க வினாயகர், மாப்பிள்ளை வினாயகர் இல்லாத குறைய தீர்க்குது. என்னதான் மால்ல இருக்குற தியேட்டர் இருந்தாலும் இந்த மாதிரி தனி தியேட்டர் குடுக்குற சுகம் படம் பாத்துட்டு வெளிய வந்து கட் அவுட்ட பாக்குறவனுக்கு மட்டுமே புரியும்.

80-20 மூவீஸ் கார்ப்பின் சார்பாக சினிமா தியேட்டர் தினம் கொண்டாடும் நோக்கில் என் சார்பாக என் வாழ்வில் மறக்க முடியாத தியேட்டரை பற்றி எழுதியுள்ளேன். சினிமா தியேட்டர் தினம் பற்றி மேலும் அறிய www.cinematheaterday.in என்னும் இணையதளம் செல்லவும்.

1 comments:

  1. அருமை அருமை.. ஆனா நான் ஐமேக்ஸ்னு பாத்து பயந்துட்டேன்..

    ReplyDelete