Saturday, September 13, 2014

வீரம் - குறியீட்டுக் குவியல்

மிக நீண்ட காலம் ஏன் தமிழில் எழுதவில்லை என்று பல வாசகர் கடிதங்கள் வந்ததாலும், சில பல வாரங்களுக்கு முன் வீரம் படத்தை கல்லூரி நண்பர்களுடன் பேருந்தில் காணும் வாய்ப்பு கிட்டியது. பேருந்தில் பார்த்தாலும் திரையரங்கில் பார்க்கும் சூழலை உருவாக்கித் தந்தனை என் சக மாணவர்கள். அஜீத் என்னும் நடிகரை விட அஜீத் என்னும் மனிதருக்கான ரசிகர்கள் அவர்கள் என்பதை கண்கூடாக கண்ட நாள் அது. திரையரங்கில் பார்த்த உணர்வைத் தந்தனர். ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுதை விட அதன் மீள்வாசிப்பின் பொழுது தான் ஆழ்ந்த சிந்தனை மற்றும் உட்கருத்து புரியும் என்று ஒரு லத்தீன் அமெரிக்க சிந்தனாவாதி கூறியதாக என் நண்பர் அடிக்கடி கூறுவார், அதே போல் வீரம் என்னும் படம் வெறும் மைய நீரோட்டப் பொழுதுபோக்குப் படம் என்ற அளவுகோளிலேயே பார்த்து வந்த என் கண்ணை திறந்தது அந்த மீள்பார்வை. இப்படத்தை எல்லோரும் பார்த்திருப்பர் என்பதாலும், அதிலும் என் வாசகர்கள் எப்படியும் திரையரங்கிலேயே பார்த்திருப்பர் என்பதாலும் இனிமேல், இப்படத்தைப் பற்றி எழுதினால் அதன் வியாபாரத்திற்கு எந்த சாதகமோ, பாதகமோ வராது என்பதோடு மட்டும் அல்லாமல் என் வலைப்பூவையெல்லாம் எவரும் படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு பின்வரும் வரிகளை எழுதுகிறேன்.


தமிழ் திரைப்பட உலகில் இன்றைய தினத்தில் குறியீடு இல்லாமல் படம் எடுத்தால் இழுக்காக கருதப் படுகிறது. அப்படி ஒரு குறியீட்டுக் குவியலாக வந்தும், எவராலும் அதன் குறியீட்டைக் காணாதே வெற்றி பெற்ற படத்தைப் பற்றி அலசும் ஒரு சிறிய பதிவே இது. இப்படத்தின் ஆரம்பத்தில் நன்றி தெரிவிக்கும் இடத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் நன்றி தெரிவித்து இருப்பதன் மூலம் படத்தில் பல குறியீடுகள் உள்ளன என்பதை குறிக்கிறார்கள். இது தான் இக்காவியத்தின் முதல் குறியீடு. பின்னர் நாகி ரெட்டி வழங்கும் என்று தொடங்கும் முன் ஒரு புரட்சி தலைவர் பாடல் மற்றும் இரு சூப்பர் ஸ்டார் பாடல்களின் துண்டுக் காட்சியுடன் தொடங்கி அஜீத் குமார் நடிக்கும் வீரம் என்று தொடங்குவதன் குறியீடு நான் சொல்லி அறியத் தேவை இல்லை. இவ்வாரு இருப்பவரை உலக நாயகனுடனும் இணைக்கும் பொருட்டு படம் நெடுக விநாயகம் தெரியாமல் அஜீத் என்னும் மாமனிதரே தெரியும் பொருட்டு படம் எடுத்துள்ளார். இக்குறியீடு குறியீட்டு மன்னர்களுக்கே விளங்காத வண்ணம் எடுத்ததற்குத் தான் என் ஆசானுக்கு படம் தொடங்கும் முன்னர் நன்றி கூறியிருக்க வேண்டும் என்பதும் என் கணிப்பு, அதன் குறீயீட்டை அறிய இயலவில்லை. 
Thursday, June 12, 2014

நான் படிக்க போறேன்

ஒரு ரெண்டு மாசமா படிக்குற எல்லாரையும் தொந்தரவு பண்ணாம இருந்ததால பல வாசகர்கள், நன்றி சொல்லி கடிதம் போட்ருந்தாங்க. சந்தோசம், அப்படியே நாமளும் ஒரு பத்து பேரு லிஸ்ட் போடலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா பாருங்க இன்னும் அந்த சண்டையே முடியல அதுனால நாம லிஸ்ட் போட்டா எடுபடாதுன்னு விட்டுட்டேன். சரி லிஸ்ட் போடலைன்னு சொல்றதுக்கா இந்த பதிவுன்னுல்லாம் திட்ட கூடாது, இந்த பதிவு எதுக்குன்னா நான் எம்.பி.ஏ படிக்க போறேன். வர்ர திங்கட்கிழமைல இருந்து வகுப்புகள் ஆரம்பம், ஆதலால் முன்னர் போல் இனி தொடர்ந்து பதிவுகள் வந்து உங்களை தொல்லைப் படுத்தாது என்று அன்புடன் கூறிக்கொள்கிறேன்.

இப்படி போட்டதும், யப்பா சாமி தொல்லை விட்டுச்சுன்னு சந்தோசப் படக் கூடாது, அப்ப அப்ப காலேஜ்ல கடுப்பேத்தினா ஒரு பதிவு போட்டு உங்களை கடுப்பேத்தி சந்தோசப்படுவேன். வாழ்த்துக்களுக்கு நன்றி. 
Tuesday, April 15, 2014

மணி தியேட்டர்/ மணி இம்பாலா/ மணி இம்பாலா மல்டிப்லெக்ஸ்

சின்ன வயசுல நான் நாலாப்பு படிக்கும் போது, திருப்பரங்குன்றம் பக்கத்துல இருக்குற ஹார்விபட்டில தான் இருந்தேன். எங்க வீட்டுக்கு பின்னாடி தான் மணி தியேட்டர். 20 பென்ச், 30 சீட், 30 சேர், பெரிய வேட்டித்துணி, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கூறை இது தான் எனக்கு மொத மொத தெரிஞ்ச மணி தியேட்டர். நெனவு தெரியாம பல படம் அதுல அதிகமா சூப்பர் ஸ்டார் படம்தான் போனாலும் என்னோட மொத தியேட்டர் அனுபவம்னு சொல்றது ”கவசம்” அப்படிங்கற படம் தான். அது வேற ஒன்னும் இல்ல ஜாக்கி சான் நடிச்ச ஆர்மர் ஆப் காட் படம் தான். எங்க கராத்தே மாஸ்டர் தான் இந்த படத்துக்குக் கூட்டிட்டு போனாரு. பென்ச்லன்னா 5 ருவா, சீட்லன்னா 10 ருவா. அந்த படத்துக்கு முன்ன வரை ஜாக்கி பத்தி எங்க மாஸ்டர் பல பில்ட் அப் குடுத்து இருந்ததாலயும், போஸ்டர் எல்லாத்துலயும் “ஜாக்கி சான் முதன் முதலில் தமிழில்” அப்படின்னு போட்டதாலயும் போனது. அப்ப டப்பிங்னு லாம் தெரியாது. பாரு ஜாக்கி என்னம்மா தமிழ் பேசுறான்னு வாயப்பொளந்துகிட்டுப் பாத்தேன். அதுக்கப்புறம் புரூஸ் லீ, அர்னால்ட்னு பல டப் பண்ணின, டப் பண்ணாத படங்கள பாக்க முடிஞ்சது அங்க தான். மாப்பிள்ளை வினாயகர், மாணிக்க வினாயகர் தியேட்டர்ல எல்லம் புது படம் வரும் இங்க அரத பழைய படம் தான் ஓடும்.
மணி இம்பாலா மல்டிப்ளெக்ஸ்

இப்படி என்னை பல ஹாலிவுட் படங்கள பாக்க வெச்ச தியேட்டர திடீர்னு மூடிட்டாங்க. இம்பாலா ஹோட்டல்காரவுங்க அந்த தியேட்டர வாங்கினாங்க நெறைய மாற்றம்லாம் செஞ்சு மணி இம்பாலானு பேர மாத்தினாங்க. டிக்கெட் காசு கூடிச்சு, புது படமும் வந்துச்சு. அதுக்கப்புறம் புது படம் பாக்கணும்னு ரொம்ப தொலவு போக வேண்டிய பிரச்சனை இல்லை. முன்ன விட தியேட்டர் நல்லாவே இருந்துச்சு. புது தியேட்டர்ல எதோ தமிழ் படம்தான் பாத்த நியாபகம். முன்னெல்லாம் படம் ஆரம்பிக்கிறதுக்கு பத்து நிமிஷம் முன்ன போனா போதும் ஆன மணி இம்பாலா ஆனதும் வெள்ளென போனா தான் டிக்கெட் கெடைக்குற நெலைமை. இருந்தாலும் வெள்ளென போய் டிக்கெட் வாங்குறதும் சொகமாத் தான் இருந்துச்சு. 
பழைய டிக்கெட் கவுன்டர் மற்றும் புதிய டிக்கெட் கவுன்டர்

அதுக்கப்புறம் நான் காலேஜ் படிக்க சென்னை வந்ததும் திரும்ப மூடிட்டதா கேள்வி பட்டேன், ஏன் எதுக்குன்னு தெரியல அப்புறம் தான் தெரிஞ்சது மணி இம்பாலா இனிமேல் மணி இம்பாலா மல்டிப்ளெக்ஸ்னு. அந்த ஒரே கட்டடத்துல மூணு தியேட்டர். அதுல நான் பாத்த முதல் படம் தசாவதாரம்னு நெனக்குறேன். அதுவும் தியேட்டர்ல எங்க தல ஹிமேஷ் ரேஷம்மியாவுக்கெல்லாம் கட் அவுட் வெச்சதால தான் நியாபகம் இருக்கு. காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்தினதால தான் இன்னும் அந்த தியேட்டர் ஓடுது. இப்ப மாணிக்க வினாயகர், மாப்பிள்ளை வினாயகர் இல்லாத குறைய தீர்க்குது. என்னதான் மால்ல இருக்குற தியேட்டர் இருந்தாலும் இந்த மாதிரி தனி தியேட்டர் குடுக்குற சுகம் படம் பாத்துட்டு வெளிய வந்து கட் அவுட்ட பாக்குறவனுக்கு மட்டுமே புரியும்.

80-20 மூவீஸ் கார்ப்பின் சார்பாக சினிமா தியேட்டர் தினம் கொண்டாடும் நோக்கில் என் சார்பாக என் வாழ்வில் மறக்க முடியாத தியேட்டரை பற்றி எழுதியுள்ளேன். சினிமா தியேட்டர் தினம் பற்றி மேலும் அறிய www.cinematheaterday.in என்னும் இணையதளம் செல்லவும்.
Sunday, April 13, 2014

மதுரை முதல் சென்னை வரை

ஒரு ரெண்டு நாளைக்கு முன்னால மதுரைக்கு போயிருந்தேன். திடீர் வேலை அப்படீங்கறதால முன்பதிவுலம் எதுவும் பண்ணாம கெடச்ச பஸ்ல போய்ட்டேன். வரும்போது சென்னை பஸ் கூட்டம் இல்லாம கெடச்சத இன்னும் என்னால நம்ப முடியல. பஸ்ல ஏறினா ஒரு அரை மணி நேரம் கூட்டம் சேர்க்க வண்டிய போட்டுடாரு நம்ம ஓட்டுனர். அந்த நேரம் அந்த புண்ணியவான் ரேடியோவுல Beatles பாட்டு ஓட விட்டாரு. என்னடா S.E.T.C வண்டில இந்த பாட்டான்னு ஒரே இன்ப அதிர்ச்சி. நம்ம அரசும் சரி, அது சார்ந்த எல்லா நிறுவனமும் சரி இந்த மாதிரி இன்ப அதிர்ச்சிய கொஞ்ச நேரம் தான் தருவாங்க, அப்புறம் அந்த இன்பத்த தூக்கிட்டு அதிர்ச்சி மட்டும் தான் தருவாங்க.

பஸ் கெளம்புனதும் M.S.V ஹிட்ஸ் ஓட ஆரம்பிச்சுருச்சு. அதுவும் முழுசும் சிவாஜி பாட்டு. சில பல பாட்டு எனக்கும் பிடிச்சதுதான்னாலும் பலது மொக்கை தான். ஆனா அந்த நல்லவர் அப்படியே மொக்கை பாட்டா போட்டுருந்தா கூட நான் தூங்கி இருப்பேன், திடீர்னு “பாட்டும் பரதமும்” படத்துல இருந்து அழகுக் கூந்தல் பாட்டை போட்டாரு. மயான அமைதியில வெறும் இஞ்சின் சத்தமும், T.M.S குரலும்னு போய்ட்டு இருந்த நேரத்துல இந்த பாட்டை போட்டதும் என்னையும் மறந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். அதுவும் நான் இருந்தது ஓட்டுனர்/நடத்துனர் சீட்டு பக்கத்துல. சிரிப்புச் சத்தம் கொஞ்சம் அதிகமானதால ஒரு மூணு சீட்டு வரைக்கும் உள்ள மக்கள் என்னை எதோ பைத்தியம் மாதிரியே பாத்தங்க. நான் சிரிச்ச காரணம் அந்த பாட்டுல சிவாஜியோட நடனம் மற்றும் லிப் ஸின்க். அதை நீங்களே பாத்துக்கோங்க. இத பாத்ததும் அடுத்த வாட்டி இந்த பாட்டை கேட்ட நீங்களும் சிரிப்பீங்க.

கொஞ்ச நேரத்துல எல்லாம் அடங்கி வழக்கமா ஓடிச்சு. மேலூர் பக்கம் சந்திரன் வந்த பின்னரும் சூரியனின் மகிமை பற்றி கூட்டம் நடந்துட்டு இருந்துச்சு. அதால வண்டியை ஊரு முழுக்க சுத்த விட்டுட்டாங்க. இதனால ஓட்டுனருக்கு செம கடுப்பு போல, மேலூர் தாண்டினதும் புரட்சி தலைவர் பாட்டா ஓடிச்சு. அவ்வளவு வண்டிச் சத்ததுலயும் ஒரு நாலு பேரு கூட பாடினது எனக்கே கேட்டுச்சு. இப்படியே கொஞ்ச ரொம்ப நேரம் போனதும் வண்டிய ஒரு டீக்கடை பக்கம் ஓரம் கட்டினாரு. லைட் எல்லாத்தயும் போட்டுட்டு ஓட்டுனர் பயணிகளை எல்லாம் பார்க்கும்போது தன்னால என் காதுல “செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா?”னு கேட்டுச்சு. 

அதுக்கப்புறம் ஜெமினி பாட்டு போட்டாரு, பத்தே நிமிஷம் தான் அடுத்து தாம்பரம் வந்தது தான் தெரியும்.  

டிஸ்கி 1: இதனை நான் முகநூலில் நிலைத்தகவாக இட்டிருந்தாலும் என் வாசகர் மார்க் அதனை எப்போது அழிப்பார் என்று அறியேன், ஆதலால் தான் இந்த பதிவு.

டிஸ்கி  2:  இந்த அருமையான பாட்டை நான் கேட்கும் பாக்கியத்தைக் கொடுத்த பிரபல இசை விமர்சகர், பதிவர், பறவை ஆர்வலர் மற்றும் இன்ன பல முகம் கொண்ட கொழந்த அவர்களுக்கு நன்றி.
Tuesday, March 4, 2014

மனிதர்கள்

இது என் நண்பனுக்காக எழுதிய பதிவு. பாவம் பயபுள்ள நொந்து போய்ருக்கான். நானும் அவனும் ரெண்டு வாரத்துக்கு முன்ன ஸ்கைவாக்ல படத்துக்குப் போனோம், அவனும் ரொம்ப காலமா என்ன பாக்கணும் பாக்கணும்னு நெனச்சும் முடியல, அவன் மதுரைல இருக்கும்போது நான் சென்னைல இருந்தேன், நான் மதுரைல இருக்கும்போது அவன் மும்பை கெளம்பிட்டான். இப்படி பல தடவ தப்பி ஒரு வழியா பாத்து, நலம் விசாரிச்சு எல்லா வேலையும் முடிச்சு படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணினா அவரு டேமேஜரும் (மன்னிக்கணும் மேனேஜர்) படத்துக்கு வரேன்னு சொல்லிட்டாரு. சோறும் சம்பளமும் தான நமக்கு முக்கியம்னு அவர நேர தியேட்டருக்கு வர சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் தாம்பரம்ல இருந்து கெளம்பினோம். ஸ்டேஷன்ல நிக்கும்போது நண்பருக்கு முதல் போன் வந்துச்சு, அவரொட இன்னொரு நண்பர் பேசினார். இவர் அளித்த பதில் மட்டும் தான் எனக்கு கேட்டுச்சு.

என் நண்பர்: ஆமாண்டா வென்று, அதுக்கென்னா ? அவிங்களுக்கு வேற வேல இல்லை அதுக்காக என்ன பண்ண சொல்ற ? அவிங்க டாப்படிக்குற எடத்துக்குல்லாம் வெள்ளன போகமுடியாது. சரி நான் அப்புறம் பேசுறேன்.

இவர் இப்படி பேசி முடிக்கும்போது, பின்னாடி ரெண்டு பேரு நண்பர் மதுரை வழக்குல பேசினத வெச்சி கலாய்ச்சுட்டே வந்தாங்க, அவரும் பொறுமையா போய்ட்டே இருந்தாரு. எனக்கு செம்ம கடுப்பு, என்ன மாப்ள அமைதியா வர ? இவிய்ங்களை எல்லாம் மெரட்டுனா தான் அடங்குவாய்ங்கன்னு சொன்னேன் ஆனா அவரோ விட்றா இன்னும் மூணு ஸ்டேஷன்ல எறங்கிருவோம் எதுக்கு வெட்டி வேலை என்றார். அவரு கொஞ்சம் அடி உதை ஆளு, அவரு இப்படி சொன்னது எனக்கு ஷாக்காடிச்சாப்புல தான் இருந்துச்சு.


என்னடா ஆச்சு உனக்கு? நீ இவ்வளவு அமைதியாலாம் இருக்க மாட்டியேன்னு எறங்குனதும் கேட்டேன். அவரு அமைதியா மச்சி நீ இன்னும் வேலைல சேரலைல அதான் பொங்குற. இவனாச்சும் பத்து நிமிஷத்துல போறவன் ஆபீசுல எனக்கு பல பேரு. ஒருத்தன் மதுரைக்காரன்னு என் தமிழத் திட்டுவான், இன்னொருத்தனுக்கு இங்லீஷ் வராது அதால என்ன பீட்டருன்னு ஓட்டுவான். இவனுங்களுக்குலாம் பதில் சொன்னா எனர்ஜி வேஸ்ட் மச்சி. இவனுங்களால என்ன பண்ண முடியும் சொல்லு? எரிச்சலாவாதான்னு கேட்டா ஆவும் ஆனா அதுவே கொஞ்ச நாள் கழிச்சு அவிங்க மேல பரிதாபமா மாறிடும். கையாலாகாத பயலுகளையெல்லாம் மதிச்சு நேரத்தை வீணடிக்க கூடாதுடா. இவன திட்ட ஆரம்பிச்சு நாம கூட நாளைக்கு இவன மாதிரியே ஆகிருவோம், அப்புறம் நம்மால ஒலகத்துல நல்லதையே பாக்க முடியாது, கண்ணுக்கு கெட்டது மட்டும் தான் தெரியும். இந்த மாதிரி ஆட்களைப் பாத்து சிரிச்சுட்டுப் போய்ட்டே இருக்கணும்னு சொல்லி முடிச்சான். அதுக்கப்புறம் எனக்கு பல விஷயம், பல மனிதர்கள் கண்ணுக்கு முன்னாடி வந்துட்டு போனாங்க. முக்கியமா நம்ம வாத்தியார் பாட்டு ஒண்ணு நெனவுக்கு வந்துச்சு.