என்னுடைய கெரசின் (அதான்பா மாமா
பையன் இனி அண்ணன் என்றே வைத்துக் கொள்வோம்) திருமணத்திற்கு சென்ற வாரம் கும்பகோணம்
சென்றிருந்தேன். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்
திருக்கோயில். திருமணம் விமரிசையாகத் தான் நடந்தது. மணநாளிற்கு முதல் நாள் என் இரு
தோழர்கள் வந்திருந்தனர். ஒருவர் காவல் துறை மற்றவர் கல்வித் துறை. அவர்களை எனக்கு முன்னமே
தெரியும் என்பதாலும் எனக்கு வேறு வேலை இல்லை என்பதாலும் அவர்களோடு மாலை முதல் சுற்றிக்கொண்டு
இருந்தேன். அன்று இரவு பணம் தீர்ந்து விட்டதால் கல்வித் துறை ATM தேடி அலைந்து கொண்டிருந்தார்,
அவரோடு நானும் காவல் துறையும் அலைந்து கொண்டிருந்தோம். அம்மா புண்ணியத்தில் இரண்டு
மணி நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்தது அதனால் எதிரில் இருந்த ATMமை இரண்டே மணி நேரத்தில்
கண்டுபிடித்து விட்டோம். அப்பொழுது மணி இரவு 10 அப்படியே சென்று உறங்க எங்கள் மூவருக்கும்
உறக்கம் வரவில்லை. அப்படியே அலைந்து கொண்டிருக்கையில் பக்கத்தில் ஒரு திரை அரங்கம்
கண்ணுக்கு தென்பட்டது. அது எவ்வ்வளவு பெரிய துர்பாக்கியம் என்பதை அப்போது நாங்கள் அறியவில்லை.
Wednesday, November 20, 2013
பொறுமை - நண்பன்
அடியேனின் நண்பர் ஒரு சிந்தனாவாதி.
அவரின் சிந்தனைகள் எல்லாம் மேற்கத்திய தாக்கம் இருப்பதுபோல் இருந்தாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி,
சாண்டில்யன் மற்றும் பலரின் தாக்கம் அதீதமாக தெரியும்.(இவர்கள் இருவரின் தாக்கம் என்றால்
என்ன என்று என்னிடம் கேட்க வேண்டாம் ஏனெனில் எனக்கு தெரியாது). இவ்வாறு தெளிவாக பிராந்திய
சிந்தனாவாதியை மேற்கத்தியத் தாக்கம் பெறாமல் இருக்க மேலும் படங்கள் பார்த்து அறிவை
வளர்க்க ஒரு புத்திமான் சத்யஜித் ரே என்னும் மாமனிதரை அறிமுகப்படுதினான். அடியேனும்
அதை வழிமொழிந்தேன். அவரைப் பார்க்க ஆரம்பித்த நண்பன், பின் படிக்கலானான், பின் உணர
ஆரம்பித்தான், பின்னர் சுவைக்க ஆரம்பித்தான் பின்னர் ரசிக்கலானான். இப்படியே சென்று
கொண்டிருந்தால் அடியேன் இப்பதிவை எழுதி இருக்க மாட்டேன். அடியேனின் நண்பன் மேற்கூறிய
எல்லாவற்றையும் தாண்டி சத்யஜித் ரே அவர்களால் அணுவளவில் தாக்கலானான். அவனது ஒவ்வொரு
அணுவும் ரே, ரே என்’ரே’ புலம்பியது, புளங்காகிதம் அடைந்தது. அத்தோடு மட்டுமல்லாமல்
அவனது தாய்மொழி வங்காளம் ஆகியது. ரே என்னும் ஒரே மனிதர் ஒருவனை வங்காளி ஆக்கிவிட்டர்,
அதுவும் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்.
இதில் புலம்ப என்ன இருக்கிறது
என்ற குழப்பம் பலருக்கு வரலாம், எல்லோரும் OCEAN’s ELEVEN பார்த்திருப்பீர்கள், அதில்
வரும் ”யென்” என்ற பாத்திரம் மாண்டரின் மொழி மட்டுமே பேசும். அதில் நடித்த அனைவருக்கும்
மாண்டரின் புரியும் (ஆடியன்ஸாகிய நமக்கு மாட்டும் புரியாது) என்பதால் படம் நகரும் மிக
அருமையாக. இப்படியாக வேலை அங்கு சரியாக நடக்கும் ஆனால் வங்காளம் அறியாத அடியேனைப் போன்ற
சாமான்யனுக்கு ஏதும் விளங்க மறுக்கிறது. அதனாலேயே பல விடயங்களை என்னால் பகிர முடிவதில்லை.
இது மட்டுமல்லாமல் அவர் ஜெ. வாசகராகி விட்டாரா என்றொறு சந்தேகமும் உள்ளது அதற்கு அவர்
பதிவுகளின் நீளமே சாட்சி. ஆனால் அவரின் கருத்துக்கள் என்னவென்று புரிய மறுக்கின்றன.
காற்றின் சீற்றத்தில் கண் தெரியாதது போல், அவரின் வங்காளச் சீற்றத்தில் அவரின் கருத்துக்களைப்
பார்க்க முடியவில்லை.
தமிழில் நீண்ட பதிவுகள் எழுதாமல்
சிறியதாக எழுதவேண்டும் என்ற அவாவோடு இதை முடித்துக் கொள்கிறேன்.
டிஸ்கி 1: இதனால் நான் கூற வரும்
கருத்து – எனக்கு வங்காளம் தெரியாது, அவனுக்கு தமிழ் புரியாது. சும்மா நேரா திட்ட தெகிரியம்
இல்ல, அதான் சூசகமா திட்டுரேன்.
டிஸ்கி 2: மச்சி நீ லாம் இங்க
பொறந்து இருக்க வேண்டிய ஆளே இல்லை, கோல்கட்டால பொறந்து இருக்கணும்.
டிஸ்கி 3: எத்தனை நாள் தான் ப்ரபால்யங்களையே
திட்டுறது, அதான் நம்ம நண்பர திட்டி ப்ரபால்யம் ஆக்கிரலாம்னு ஒரு நல்ல எண்ணம்.
டிஸ்கி 4: இது வரை உங்கள் திரையை
கிழிக்காமல் படித்தாலோ, அல்லது இது வரை படித்தாலோ நீங்கள் மிக மிக பொறுமைசாலி என்ற
நற்சான்றிதழை நானே வழங்குகிறேன்.
டிஸ்கி 5: இது புலம்பலை முகநூல் பதிவாக போடுவோரை பகடி செய்வதாக எண்ண வேண்டவே வேண்டாம். என் எழுத்து எல்லாம் ஈசனின் செயலே அன்றி எமது அல்ல.
Friday, November 15, 2013
கேடி ராம்போ, கில்லாடி அர்னால்ட் - பின் நவீனத்துவ நீட்சி
மிக நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில்
எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு வந்தது இந்த படம் தான். அப்படி நான் எந்த
பட்த்தைப் பற்றி எழுத போகிறேன் என்று பார்ப்பதற்கு முன், சீக்வல்(Sequel) பற்றி சிறிது
கூற விழைகிறேன்.
சீக்வல் என்பது யாதெனில் ஒரு பகுதியின்
தொடர்ச்சி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது நீட்சியாக கொள்ளப்படுகிறது. ஏன் அப்படி
கூறுகிறேன் என்றால் சினிமாவை எடுத்துக்கொண்டால் ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சி என்பதைத்
தாண்டி அப்படத்தின் வியாபாரத்தின் நீட்சியாகத் தான் இருக்கிறது. இதற்கு பல உதாரணங்களை
நம் தமிழ் சினிமாவிலேயே கூறலாம். இந்த நீட்சிக்கு முதன்மையான எடுத்துக்காட்டு முன்னா
பாய், இப்பொழுது தமிழில் பீட்சா. பீட்சா முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும்
சம்மந்தமே இல்லையெனிலும் முதல் பாகம் செய்த வியாபாரமே இதற்கான நீட்சிக்குக் காரணம்
என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இப்பொழுது நீங்கள் நான் பேசப் போகும் படத்தைப் பற்றி
யூகித்திருப்பீர்கள். ஆனால் உங்கள் யூகம் தவறு, நான் மேற்குறிப்பிட்ட படத்தைப் பற்றி
பேச வரவில்லை. நான் பேசப்போகும் படம் இந்த வருடமே நீட்சியாக சில வாரங்கள் முன் வந்து
மறக்கப்பட்ட படம்.
கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு |
சிங்கம் 2ல் ஆப்பிரிக்கா வரை சிங்கம்
செல்கிறார் என்றால் இப்படத்தில் கதைக் களனையே அமெரிக்காவில் வைத்திருக்கின்றனர். நடிகர்களும்
அமெரிக்க நடிகர்களே, ஏன் இயக்குனர் மற்றும் தயாரிப்பைக்கூட அமெரிக்கர்களிடம் கொடுத்துவிட்டு
வெளியீட்டின் பொழுது இந்திய முத்திரையுடன் வெளியிடப்பட்ட நீட்சி தான் “கேடி ராம்போ,
கில்லாடி அர்னால்ட்”. இப்பாகமும் முதல் பாகமான “கேடி பில்லா, கில்லாடி ரங்கா” போல பல
கிளிசேக்களை கொண்டுள்ளது. இரண்டு நாயகர்கள், பெரிய வில்லன் கும்பல், நண்பனைப்போல் இருக்கும்
வில்லன்கள், நாயகனுக்காக உயிர்விடும் ஒருநபர் மற்றும் அல்லக்கைகள். இதோடு மட்டும்
அல்லாமல் முதல் பகுதியைப்போல் நாயகர்கள் பெயருக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை.
இவ்வாறு பல கிளிசேக்களை கொண்டு இது நீட்சி என்பதை புரிய வைத்தாலும் பாமரர்களும் அறிய
எண்ணி அதே எழுத்துருவில்(Font) தலைப்பை வடியமைதிருப்பார்கள்.
இப்படம் நீட்சிகளின் மைல்கல் என்பதே
என் எண்ணம், மற்றும் இது பீட்சா 2 வருவதற்கு முன்னரே வந்த்ததால் இப்படி பின் நவீனத்துவ
நீட்சியின் முதல் படி என்றே கூறலாம். இப்படி கூறிக்கொண்டே படத்தின் கதையைக் கூறாமல்
ஏமாற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம். படத்தின் கதை யாதெனில் சுய விருப்பமாக சிறை
சென்று அங்கிருந்து தப்பிப்பதே தொழிலாக வைத்துள்ளார். அவர் ஒரு சிக்கலான சிறையில் மாட்டிக்கொள்கிறார்,
அவருக்கு உதவியாக இணை நாயகன்(துணை நாயகன் என்று போட்டு டெர்மினேட்டர் ரசிகர் சங்க உறுப்பினர்களிடம்
அடி வாங்கும் எண்ணம் இல்லை) செயலில் இறங்குகிறார். அதன் பின் வரும் திருப்பங்களை திரையில்
அல்லது திருட்டு விசிடியில் காண்க.
டிஸ்கி: இந்த படம் ஏனோ எனக்கு
ஆங்கிலத்தில் வெளியான Escape Plan படத்தை அடிக்கடி நினைவு படுத்துகிறது.