மிக நீண்ட காலம் ஏன் தமிழில் எழுதவில்லை என்று பல வாசகர்
கடிதங்கள் வந்ததாலும், சில பல வாரங்களுக்கு முன் வீரம் படத்தை கல்லூரி நண்பர்களுடன்
பேருந்தில் காணும் வாய்ப்பு கிட்டியது. பேருந்தில் பார்த்தாலும் திரையரங்கில் பார்க்கும்
சூழலை உருவாக்கித் தந்தனை என் சக மாணவர்கள். அஜீத் என்னும் நடிகரை விட அஜீத் என்னும்
மனிதருக்கான ரசிகர்கள் அவர்கள் என்பதை கண்கூடாக கண்ட நாள் அது. திரையரங்கில் பார்த்த
உணர்வைத் தந்தனர். ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுதை விட அதன் மீள்வாசிப்பின் பொழுது
தான் ஆழ்ந்த சிந்தனை மற்றும் உட்கருத்து புரியும் என்று ஒரு லத்தீன் அமெரிக்க சிந்தனாவாதி
கூறியதாக என் நண்பர் அடிக்கடி கூறுவார், அதே போல் வீரம் என்னும் படம் வெறும் மைய நீரோட்டப்
பொழுதுபோக்குப் படம் என்ற அளவுகோளிலேயே பார்த்து வந்த என் கண்ணை திறந்தது அந்த மீள்பார்வை.
இப்படத்தை எல்லோரும் பார்த்திருப்பர் என்பதாலும், அதிலும் என் வாசகர்கள் எப்படியும்
திரையரங்கிலேயே பார்த்திருப்பர் என்பதாலும் இனிமேல், இப்படத்தைப் பற்றி எழுதினால் அதன்
வியாபாரத்திற்கு எந்த சாதகமோ, பாதகமோ வராது என்பதோடு மட்டும் அல்லாமல் என் வலைப்பூவையெல்லாம்
எவரும் படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு பின்வரும் வரிகளை எழுதுகிறேன்.
தமிழ் திரைப்பட உலகில் இன்றைய தினத்தில் குறியீடு இல்லாமல்
படம் எடுத்தால் இழுக்காக கருதப் படுகிறது. அப்படி ஒரு குறியீட்டுக் குவியலாக வந்தும்,
எவராலும் அதன் குறியீட்டைக் காணாதே வெற்றி பெற்ற படத்தைப் பற்றி அலசும் ஒரு சிறிய பதிவே
இது. இப்படத்தின் ஆரம்பத்தில் நன்றி தெரிவிக்கும் இடத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும்
நன்றி தெரிவித்து இருப்பதன் மூலம் படத்தில் பல குறியீடுகள் உள்ளன என்பதை குறிக்கிறார்கள்.
இது தான் இக்காவியத்தின் முதல் குறியீடு. பின்னர் நாகி ரெட்டி வழங்கும் என்று தொடங்கும்
முன் ஒரு புரட்சி தலைவர் பாடல் மற்றும் இரு சூப்பர் ஸ்டார் பாடல்களின் துண்டுக் காட்சியுடன்
தொடங்கி அஜீத் குமார் நடிக்கும் வீரம் என்று தொடங்குவதன் குறியீடு நான் சொல்லி அறியத்
தேவை இல்லை. இவ்வாரு இருப்பவரை உலக நாயகனுடனும் இணைக்கும் பொருட்டு படம் நெடுக விநாயகம்
தெரியாமல் அஜீத் என்னும் மாமனிதரே தெரியும் பொருட்டு படம் எடுத்துள்ளார். இக்குறியீடு
குறியீட்டு மன்னர்களுக்கே விளங்காத வண்ணம் எடுத்ததற்குத் தான் என் ஆசானுக்கு படம் தொடங்கும்
முன்னர் நன்றி கூறியிருக்க வேண்டும் என்பதும் என் கணிப்பு, அதன் குறீயீட்டை அறிய இயலவில்லை.